தாராபுரம்: தாராபுரம் அருகே, ஓடும் பேருந்தில் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அசம்பாவிதங்கள் ஏதுமின்றி, அதில் பயணித்த பயணிகள் 52 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
திருப்பூரிலிருந்து திருச்செந்தூர் செல்லும் அரசுப் பேருந்து நேற்று 52 பயணிகளுடன் கிளம்பியது. இரவு 11 மணியளவில் அந்தப் பேருந்து தாராபுரத்தை வந்தடைந்தது. ஓட்டுநர் கணேசமூர்த்தி (55) மற்றும் நடத்துநர் சிகாமணி (60) ஆகியோர் பேருந்தை இயக்கினர்.
தாராபுரம் புறவழிச் சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்ஜின் பகுதியில் தீ பற்றியது. இதையடுத்து உடனடியாக பேருந்தில் இருந்த 52 பயணிகளும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். அடுத்த சில நிமிடங்களிலேயே பேருந்து மளமளவென தீ பற்றி எரிந்தது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பேருந்தில் வந்த 52 பயணிகளும் மாற்றுப் பேருந்துக்காக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலையில் காத்திருந்தனர். பேருந்து வர தாமதம் ஆனதால் பயணிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மாற்றுப் பேருந்து வரவழைக்கப்பட்டு அனைத்துப் பயணிகளும் அதில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து தாராபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.