மும்பை: ராகுல் காந்தி தனது கடின உழைப்பின் மூலமாக தன்மீதான மக்களின் பார்வையை சுவாரஸ்யமானதாக மாற்றியுள்ளார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பாராட்டியுள்ளார் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான்.
ஆங்கில ஊடகம் ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சைஃப் அலி, அவர் (ராகுல் காந்தி) நேர்மையான மற்றும் துணிச்சலான அரசியல்வாதி என்றும் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் அரசியல்வாதிகளைப் பற்றிய கேள்வியில், பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கேஜ்ரிவால் இவர்களில் யார் துணிச்சலானவர்கள், இந்தியாவை எதிர்காலத்தை நோக்கி வழிநடத்தக்கூடியவர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சைஃப் அலி, இவர்கள் அனைவருமே துணிச்சலான அரசியல்வாதிகள் தான். தொடர்ந்து சைஃப் அலி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை பாராட்டிப் பேசினார்.
அவர் கூறுகையில், “ராகுல் காந்தி செய்தவைகள் மிகவும் சுவாரஸ்யம் மிக்கதாக இருக்கின்றது. ஏனென்றால் அவர் பேசும் விஷயங்கள், செய்யும் செயல்கள் அனைத்தையும் மக்கள் அவமதிக்கும் ஒரு நிலை இருந்தது. என்றாலும் அவர் மிகவும் கடினமாக உழைத்து, மிகவும் சுவாரஸ்யமான வழியில் அவைகளை மாற்றி அமைத்தார் என்று நான் நினைக்கிறேன்.
இதனைத் தாண்டி, நான் யாரை ஆதரிக்கிறேன், எனது அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை விவாதிக்க நான் விரும்பவில்லை. ஏனென்றால் நான் அரசியல் சார்பற்றவானாக இருக்க விரும்புகிறேன். மேலும் நாடு தெளிவாக தனது கருத்தை வெளிப்படுத்தி இருப்பதாக நான் கருதுகிறேன். ஒருவிஷயம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவில் ஜனநாயகம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.
நான் அரசியல்வாதியில்லை. நான் அரசியல்வாதியாக விரும்பியது இல்லை. ஒருவேளை எனக்கு அப்படியான வலுவான பார்வை இருந்தால் நான் அவர்களில் ஒருவனாக மாறி, அந்த வழியில் சென்று எனது கருத்தைப் பகிர்வேன்.
நீங்கள் (பத்திரிக்கையாளர்கள்) எல்லோரும் துணிச்சல் மிக்கவர்கள், என்னைவிட துணிச்சல் மிக்கவர்கள். அந்த அளவுக்கான அழுத்தத்தை நான் சந்தித்தது இல்லை. ஒருவேளை நான் அதனைச் சந்திக்கிருந்தால் அதன் வழியில் சென்று அரசியல்வாதியாகியிருப்பேன், ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்திருப்பேன். ஆனால் அந்த அளவுக்கு நான் இன்னும் தயாராகவில்லை.” இவ்வாறு அவர் பேசினார்.