மைசூரு: எந்த தவறும் செய்யவில்லை என்பதால் தான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும், ஜாமீனில் இருக்கும் குமாரசாமி ராஜினாமா செய்துவிட்டாரா என்று பாஜகவுக்கு அவர் கேள்வி எழுப்பினார்.
மைசூர் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, “அரசமைப்புச் சட்டத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநர், மாநில நிர்வாகத்தில் தலையிடுவது சரியல்ல. நாட்டில் எங்கெல்லாம் எதிர்க்கட்சி ஆட்சி இருக்கிறதோ, அங்கெல்லாம் மத்திய அரசும் பாஜகவும், அமலாக்கத்துறை, சிபிஐ, ராஜ்பவன் அலுவலகம் ஆகியவற்றை தவறாகப் பயன்படுத்துகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்படுவதற்காக ஆளுநர் நியமிக்கப்படுகிறார். எந்த தேர்தல் மூலமும் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அரசியலமைப்பில் அந்த பதவி முக்கியமானது. ஆனால், மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆட்சிக்கு வருகிறார்கள். இவ்வளவு முக்கியமான வேறுபாடு இருக்கும்போது எந்த மாநில ஆளுநரும் மாநில நிர்வாகத்தில் தலையிடுவது சரியல்ல. இந்த விவகாரத்தில் நாடு தழுவிய விவாதம் நடத்தப்பட வேண்டும்.
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (முடா) வழக்கு சட்டப்படி நடத்தப்படும். இதுபோன்ற முறைகேடு வழக்கு என் மீது பதிவு செய்வது இதுவே முதல்முறை. அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. நீதி என் பக்கம் இருக்கிறது. இதை எதிர்கொண்டு வெற்றி பெறுவேன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஆசியைப் பெற்று காங்கிரஸ் அரசு நல்ல முறையில் ஆட்சி செய்து வருகிறது. ஐந்தாண்டு காலத்தில் மாநிலத்தை மேம்படுத்த மக்கள் ஆணை இட்டுள்ளார்கள். இதில் ஆளுநர் தலையிடக்கூடாது. தலையிட்டால் தவிர்க்க முடியாமல் எதிர்க்க வேண்டி வரும்.
நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றன. ஜாமீனில் இருக்கும் குமாரசாமி ராஜினாமா செய்துவிட்டாரா? நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு ராஜினாமா செய்தாரா? காங்கிரஸ் அரசை விமர்சிக்க பாஜக தலைவர்களுக்கு தகுதி இல்லை. ஆபரேஷன் தாமரை மூலம் கர்நாடக அரசை சீர்குலைக்க பாஜக முயன்றது. அந்த முயற்சி தோல்வியடைந்தது. அதனால் இப்போது பொய்யான குற்றச்சாட்டை பெரிதாக்குகிறார்கள்.
கர்நாடக பாஜகவில் தவறு செய்யாத, ஊழல் செய்யாத ஒரு தலைவர் உண்டா? பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும், ஆளுநரும் எங்களுக்கு எதிராக எவ்வளவு தொல்லை கொடுத்தாலும், ஏழைகளுக்கு ஆதரவான உத்திரவாத திட்டங்களை நாங்கள் நிறுத்த மாட்டோம். இன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து எனக்கு ஆதரவு தெரிவித்தனர். மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். அவர்களுக்காக எங்கள் அரசு உள்ளது” என தெரிவித்தார்.
சித்தராமையா மீது வழக்குப் பதிவு: மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் இட ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி மற்றும் இருவர் மீது மைசூருவில் உள்ள லோக் ஆயுக்தா போலீஸ் இன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மைசூருவில் உள்ள லோக் ஆயுக்தா போலீஸ் சூப்பிரண்டு டி.ஜே. உதேஷ் தெரிவித்துள்ளார்.
சித்தராமையா முதல் குற்றம்சாட்டப்பட்டவராகவும், அவரது மனைவி பார்வதி 2வது குற்றம் சாட்டப்பட்டவராகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். சித்தராமையாவின் மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி மற்றும் மல்லிகார்ஜுன சுவாமிக்கு நிலத்தை விற்ற தேவராஜு ஆகியோர் குற்றம் சாட்டப்பட்ட 3 மற்றும் 4 வது நபர்கள் என உதேஷ் தெரிவித்துள்ளார்.