புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி அரசு மருத்துவமனை சட்டப்பேரவை அருகே அமைந்துள்ளது. இங்கு ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணிகளுக்கு 92 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் காலைப் பணிகளை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
போராட்டம் தொடர்பாக கேட்டதற்கு, புதுச்சேரி அரசு மருத்துமனையில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 7 ஆண்டுகளாக 92 பேர் துப்புரவு பணிகளில் பணிபுரிந்து வருகிறோம். தற்போது ஒப்பந்த நிறுவனம் மாறி உள்ளது. அதனால் பழைய ஆட்களை வரும் 1ம் தேதி முதல் பணிக்கு வரவேண்டாம் என தெரிவித்துள்ளார். இப்பணிக்கு புதிய ஆட்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
பணியில் பல ஆண்டுகள் இருக்கும் எங்களுக்கு பணி தர மறுத்தால் நாங்கள் பாதிக்கப்படுவோம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்றனர்.
இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஊழியர்களின் கோரிக்கை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்து சுகாதார துறை இயக்குநர் அலுவலகம் சென்று பொறுப்பு இயக்குநர் செவ்வேல் மற்றும் மருத்துவ அதிகாரியுடன் ஒப்பந்த ஊழியர்கள் ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களை நீக்கிவிட்டு புதிதாக நியமிப்பது நியாயமல்ல என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது பற்றி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசி முடிவு எடுக்கலாம் என அவர் கூறினார்.
இதனையடுத்து அங்கிருந்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை சந்தித்து முதல்வருடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதுவரை எங்களது போராட்டத்தை தொடருவோம் என ஊழியர்கள் தெரிவித்து மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்துள்ளனர்.