மும்பை: மகாராஷ்டிரா மற்றும் மும்பையில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வட மத்திய மகாராஷ்டிராவுக்கு அருகில் ஒரு புயல் உருவாகியுள்ளது. அதன் காரணமாக வரும் நாட்களில் மகாராஷ்டிாரவில் மழைப் பொழிவு இருக்கும். இன்று (செப்.27) மும்பையின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாசிக் நகருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பால்கர், புனே, நன்துர்பார் மற்றும் துலே பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிராவின் ஒவ்வொரு நகரத்துக்கும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பிர்ஹம் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன், மும்பை இன்று மேகமூட்டத்துடன் காணப்படும், நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, மத்திய மகாராஷ்டிராவுடன் கொங்கன் மற்றும் கோவா பகுதிகளில் இந்த வாரம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் 12 செ.மீ அதிகமான மழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது.
இதனிடையே, மத்திய மகாராஷ்டிராவின் பல பகுதிகள் மற்றும் குஜராத்தில் செப்.28-ம் தேதி அதி கனமழை பெய்யக்கூடும். அதனால் பொது மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும் படியும், மழையை எதிர்கொள்ள தயாராகும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
அதேபோல, தெற்கு குஜராத் பகுதிகள் மற்றும் கொங்கன் மற்றும் கோவாவின் கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலை பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கனமழையின் போது மக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
உள்ளூர் அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருவதாகவும், வெள்ளம் காரணமாக ஏதாவது அவசரத் தேவை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, செப். 25-ம் தேதி மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்த கனமழையால் நகரின் பலபகுதிகளில் தண்ணீர் சூழந்துள்ளது. மும்பையில் மழையின் அளவு செப். மாதத்து சராசரியான 350 மில்லி மீட்டர் அளவைக் கடந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.