பெங்களூரு / புதுடெல்லி: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அண்மையில் நடந்த வழக்கு ஒன்றின் விசாரணையின்போது நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா, “பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் பகுதி பாகிஸ்தானை போல இருக்கின்றன” என விமர்சித்தார். அதேபோல் வேறொரு வழக்கில், பெண் வழக்கறிஞரிடம், “அவர் அணிந்திருக்கும் உள்ளாடையின் நிறத்தை கூட சொல்வீர்கள் போலிருக்கிறதே?” என கேள்வி எழுப்பினார். இந்த இரு சம்பவங்களின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் எஸ்.கண்ணா, பி.ஆர். கவாய், எஸ்.காந்த் மற்றும் எச்.ராய் ஆகிய 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு கடந்த சனிக்கிழமை தாமாக முன்வந்து விசாரித்தது. அப்போது, “கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி இதுபோன்ற கருத்துகள் கூறுவதை ஏற்க முடியாது. இதுகுறித்து கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர், அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
இதையடுத்து நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா, “உள்நோக்கத்தோடு அந்தக் கருத்துகளை நான் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அவை சமூக வலைதளங்களில் தவறான முறையில் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. எனது கருத்துகள் தனி நபருக்கோ, ஒரு குறிப்பிட்ட சமூக பிரிவினருக்கோ வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தால் அதற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “இந்தியாவின் எந்தப் பகுதியையும் யாரும் பாகிஸ்தான் என அழைக்க முடியாது. இது ஒருமைப்பாட்டுக்கு எதிரானது. கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அதன் கண்ணியம் கருதி, அவருக்கு எதிராக சம்மன் பிறப்பிக்க தேவையில்லை என்று முடிவெடுத்துள்ளோம்.
நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதை நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் புரிந்து கொள்ள வேண்டும். சமூகம் சார்ந்த கருத்துகளை முரணானவகையில் பேசுவது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிந்திருக்க வேண்டும்” எனக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவசர மனுவை, நீதிபதி ஹேமந்த் சந்திரகவுடா விசாரித்து நேற்று முன்தினம் வெளியிட்ட தீர்ப்பில், ‘‘நீதிமன்ற நடவடிக்கைகளை சமூக வலைதளங்களில் ஒளிபரப்புவதற்கும், விசாரணை முடிந்த பின்னர் பதிவேற்றுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. நீதிமன்ற நடவடிக்கைகளை தனிநபர் பதிவேற்றுவதற்கும், ஏற்கெனவே பகிரப்பட்ட வீடியோக்களை அழிப்பதற்கும் நீதிமன்ற பதிவாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மத்திய, மாநில அரசு, சமூக வலைதள நிறுவனங்கள் உரிய விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிடப்படுகிறது”என குறிப் பிட்டுள்ளார்