ரேவாரி: ‘எம்எஸ்பி-யின் விரிவாக்கம் என்ன என்பது ராகுல் காந்திக்கு தெரியுமா?’ என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சாடியுள்ளார். மேலும், ஹரியானாவில் உள்ள பாஜக அரசு 24 பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹரியானாவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா, விவாசாயிகள் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக சாடினார். அவர் பேசுகையில், “ராகுல் காந்தி ஒரு பொய் பேசும் இயந்திரம். சில என்ஜிஓ-கள் எம்எஸ்பி (குறைந்தபட்ச ஆதரவு விலை) என்று கூறினால் வாக்குகளை அள்ளிவிடலாம் என்று ராகுல் காந்தியிடம் கூறியிருக்கின்றன. ராகுல் பாபா… உங்களுக்கு எம்எஸ்பி-யின் விரிவாக்கம் தெரியுமா? எவை எவை காரீஃப் பயிர்கள்? எவை எவை ராபி பயிர்கள் என்பது தெரியுமா?
ஹரியானாவில் உள்ள பாஜக அரசு 24 பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்கிறது. காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் எவ்வளவு பயிர்கள் அவ்வாறு கொள்முதல் செய்யப்படுகின்றன என்பதை ஹரியானா காங்கிரஸ் தலைவர்கள் கூறட்டும். காங்கிரஸ் ஆளும் கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் எவ்வளவு பயிர்கள் எம்எஸ்பி-யின் கீழ் கொள்முதல் செய்யப்படுகின்றன என்பது தெரியுமா? காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நெல் குவிண்டால் ரூ.1,300-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது அது ரூ.2,300-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஹரியானாவில் பாஜக ஆட்சி அமைந்தால் நெல் ஒரு குவிண்டால் ரூ.3,100-க்கு கொள்முதல் செய்யப்படும்.
நீண்ட காலம் நிலுவையில் இருந்த ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்றியது நரேந்திர மோடி அரசுதான். பாஜக அரசு ஹரியானாவில் சமமான வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஊழல் ஒழிக்கப்பட்டுவிட்டது. கட், கரப்ஷன், கமிஷன் அடிப்படையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்தபோது டீலர்கள், தலால்கள் (இடைத்தரகர்கள்), தாமாக்கள் ஆட்சி செய்தனர். பாஜக ஆட்சியில் டீலர்கள் இல்லை, இடைத்தரகர்கள் இல்லை. தாமாக்கள் என்ற கேள்விகே இடமில்லை” என்று அமித் ஷா பேசினார். ஹரியாணா மாநிலத்தில் வரும் அக்.5-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. வாக்குகள் அக்.8-ம் தேதி எண்ணப்படுகின்றன.