புதுடெல்லி: ராகுல் காந்தியின் குடியுரிமையை பறிப்பது தொடர்பாக அலாகாபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு என்ன நிலையில் உள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என மத்திய அரசை டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமையை ரத்து செய்யக் கோரி பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரிட்டிஷ் பாஸ்போர்ட் விசாரணையின்போது தான் ஒரு பிரிட்டன் குடிமகன் என்பதை பிரிட்டிஷ் அரசிடம் வெளிப்படுத்தியது குறித்து விளக்கம் அளிக்கும்படி கடந்த 2019 ஆகஸ்ட் 6-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார். மேலும்,இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என அவர் அந்த மனுவில் கோரியிருந்தார்.
ராகுலின் குடியுரிமை ரத்து செய்வது தொடர்பான இதேபோன்ற வழக்கு அலாகாபாத் நீதிமன்றத்திலும் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒரே விவகாரத்தை முன்வைத்து தொடுக்கப்படும் வழக்குகளை இரண்டு நீதிமன்றங்களில் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: ராகுல் குடியுரிமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலாகாபாத் உயர் நீதிமன்றமும் விசாரித்து வருகிறது. ஒரே பிரச்சினையை இண்டு நீதிமன்றங்கள் ஒரே நேரத்தில் கையாளமுடியாது. எனவே, இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டு அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்விசாரணையில் உள்ள மனுவின் தற்போதைய நிலையை சரிபார்த்து, அதன் நகலைப் பெற்று தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தப்படுகிறது. வேறொருவரின் அதிகார வரம்பை நாங்கள் கையில் எடுக்கக்கூடாது என்பதில் இரட்டிப்பு உறுதியுடன் உள்ளோம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த மனு தொடர்பான விசாரணையின்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் நகலைப் பெறுவதற்கு சிறிது அவகாசம் அளிக்க வேண்டும் என மத்திய அரசின் வழக்கறிஞர் நீதிபதிகளிடம் வலியுறுத்தினார். இதையடுத்து இந்த வழக்கை அக்டோபர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.