ரோஹித், இஷான் போனாலும்… ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை தூக்க காத்திருக்கும் இந்த 2 வீரர்கள்!

IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கான விதிகள் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் ஒரு அணி 5 வீரர்களை தக்கவைக்க அனுமதி கிடைக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, கடந்த 2022 மெகா ஏலத்தை போன்று இந்த ஏலத்திலும் RTM ஆப்ஷன் கிடையாது என தகவல்கள் கூறுகின்றன. அஸ்வின் உள்ளிட்ட சில வீரர்கள் RTM என்பது வீரர்களுக்கு ஏலத்தில் உரிய தொகை கிடைக்கச் செய்யாமல் தடுக்கும் முறை குற்றஞ்சாட்டியிருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது. 

அந்த வகையில், ஒரு அணி 5 வீரர்களை தக்கவைக்க வேண்டும் என்றால் அதிகபட்சமாக 4 இந்திய வீரர்களையும், அதிகபட்சமாக 2 வெளிநாட்டு வெளிநாட்டு வீரர்களையும் தக்கவைக்க வாய்ப்பு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. அதாவது, அணிகள் 3 இந்தியர்கள், 2 வெளிநாட்டவர்களை எடுக்கலாம் அல்லது 4 இந்தியர்கள், 1 வெளிநாட்டவரை எடுக்கலாம். எனவே, 10 அணிகளும் தங்களின் காம்பினேஷன்களை கண்டறிந்து அதற்கேற்ப வீரர்களை தக்கவைக்கவும், மீதம் உள்ளவர்களை ஏலத்தில் தூக்கவும் இப்போது திட்டம் வகுத்திருப்பார்கள் எனலாம். 

சிஎஸ்கே மற்றும் மும்பை

ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய அணிகளான சிஎஸ்கே மற்றும் மும்பை ஆகியவை தக்கவைக்கும் வீரர்கள் யார் யாராக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் உச்சத்தில் உள்ளது. சிஎஸ்கேவை பொறுத்தவரை தோனி மீண்டும் வருவாரா மாட்டாரா என்ற பெரிய கேள்வி இருக்கிறது. தோனி வருவது உறுதியானால் அவருடன் ருதுராஜ், ஜடேஜா, தூபே, பதிரானா ஆகியோர் தக்கவைக்கப்படலாம். தோனி இல்லை எனும்பட்சத்தில் கான்வே அல்லது ரச்சின் ரவீந்திரா ஆகியோரில் ஒருவரை சிஎஸ்கே தக்கவைக்கும்.

அதேபோல் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியை எடுத்துக்கொண்டால் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், பும்ரா, ரோஹித், நுவான் துஷாராவை தக்கவைக்கலாம். ரோஹித் சர்மா (Rohit Sharma) மும்பையை விட்டு வெளியேறும்பட்சத்தில் திலக் வர்மா அல்லது அன்சுல் கம்போஜ் அல்லது நேஹல் வதேரா ஆகியோரில் ஒருவரை தக்கவைக்கலாம். எனவே, ஐபிஎல் விதிகள் அறிவிக்கப்பட்ட உடனேயே ஒவ்வொரு அணிகளும் தங்களின் முடிவை வெளியிட தொடங்கும் எனலாம். 

வெளியேறப்போவது யார் யார்?

அப்படியிருக்க இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை அணி இந்த 2 வெளிநாட்டு வீரர்களுக்கு நிச்சயம் செல்லும் என எதிர்பார்க்கலாம். அதாவது, இஷான் கிஷன் (Ishan Kishan), திலக் வர்மா, டிம் டேவிட் உள்ளிட்டோர் வெளியேறும்பட்சத்தில் ஓப்பனிங்கில் நிச்சயம் ஒரு வெளிநாட்டு வீரரை மும்பை இந்தியன்ஸ் அணி தேடும். கடந்த சீசனில் ரோஹித் – இஷான் கம்போ பெரியளவில் கைக்கொடுக்கவில்லை. எப்போதும் மும்பைக்கு ஓப்பனர்களில் இந்தியர் – வெளிநாட்டவர் காம்போ நன்கு கைகொடுக்கும். எனவே, ஓப்பனிங்கிலும் அனுபவமுள்ள வெளிநாட்டு வீரரை எடுக்க விரும்பும்.

மறுபுறம் மிடில் ஆர்டரில் அதாவது ஓப்பனிங்கை தவிர்த்து கீழே எந்த வரிசையிலும் இறங்கி வெளுத்து வாங்கக்கூடிய ஒரு ஹிட்டரை அதுவும் வெளிநாட்டு ஹிட்டரை எடுக்க நினைக்கும். பொல்லார்ட் போல் ஆல்-ரவுண்டர் தனியாக கிடைக்கவிட்டாலும் கூட பேட்டிங்கில் அதிரடி வீரர் கிடைத்தாலே அந்த அணிக்கு பெரிய உதவிதான். அந்த வகையில், இந்த இரண்டு இடங்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி டேவிட் வார்னர் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோரை வரும் மெகா ஏலத்தில் நிச்சயம் எடுக்க வாய்ப்பிருக்கிறது. 

ஏலத்தில் இந்த வீரர்களுக்கு குறி

வார்னர் (David Warner) டெல்லி அணியில் இருந்து நிச்சயம் ஏலத்திற்கு விடுவிக்கப்படுவார். அவர் சர்வதேச டி20இல் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் மற்ற அணிகள் அவரை அதிக தொகைக்கு எடுக்கவும் முயற்சிக்காது. எனவே மும்பை ஒரு நல்ல தொகையில் அவரை ஓப்பனிங்கிற்கு எடுக்கும். ஒருவேளை ரோஹித் சர்மா உடனோ அல்லது வேறு வலது கை பேட்டர் உடனோ களமிறங்க வார்னர் பக்காவாக இருப்பார். 

மறுபுறம், நிக்கோலஸ் (Nicholos Pooran) பூரன் கடந்த முறை எல்எஸ்ஜி அணிக்கு சிறப்பாக விளையாடியிருந்தாலும் அவர் ஏலத்திற்கு விடுவிக்கப்படும் வாய்ப்பும் அதிகம் இருக்கிறது. அந்த வகையில், அவர் ஏலத்திற்கும் வரும்பட்சத்தில் மிடில் ஆர்டரில் எந்த இடத்திலும் இறங்கி சிக்ஸர் அடிக்கும் வல்லமை கொண்ட அவரை மும்பை நிச்சயம் எடுக்க நினைக்கும். இஷான் கிஷனும் இல்லாத நேரத்தில் இவர் கீப்பிங்கையும் பார்த்துக்கொள்வார் என்பதால் மும்பை நிச்சயம் இவரையும் தனது பிளானிங்கில் வைத்திருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.