பெய்ரூட்: இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், ஹிஸ்புல்லா உடனான போர் நிறுத்தத்துக்கான உலகளாவிய அழைப்புகளை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. இந்நிலையில், லெபனான் ‘தலைமுறையில் மிக மோசமான காலக்கட்டத்தை’ எதிர்கொள்கிறது என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், தரைவழித் தாக்குதலுக்கும் தயாராகி வருகிறது. இந்நிலையில், லெபனானில் உள்ள ஐ.நா மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் இம்ரான் ரிசா “நாடு பல தசாப்தங்களில் இல்லாத கொடூரமான போரை எதிர்கொள்கிறது. ஒரு தலைமுறையில் லெபனானில் மிக மோசமான காலக்கட்டத்தை நாங்கள் காண்கிறோம். நெருக்கடி இன்னும் மோசமடையக் கூடும். இது ஆரம்பம் என்று பலர் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்துகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
லெபனானில் இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில் இன்று காலை முதல் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 700 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தெற்கு லெபனானில் இருந்து அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தியுள்ளனர். இடம்பெயர்ந்த மக்களுக்கான தங்குமிடங்களாக பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மாற்றப்பட்டுள்ளன. தற்போது 446 இடங்கள் தயார் நிலையில் உள்ளன. லெபனானில் இரண்டு நாட்களில் குறைந்தது 50 குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்று யுனிசெஃப் கவலை தெரிவித்துள்ளது.
வடக்கு இஸ்ரேல் மீண்டும் பாதுகாப்பாக இருக்கும் வரை லெபனானின் ஹெஸ்புல்லா ஆயுதக் குழுவை, இஸ்ரேல் ராணுவம் குறிவைத்துத் தாக்கும் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் கூறுகிறார். ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 72 மணி நேரத்தில் 30,000-க்கும் அதிகமானோர் லெபனானில் இருந்து சிரியாவுக்குள் நுழைந்துள்ளனர் என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், முழுக்க முழுக்க ஈரான் நேரடியாக மோதலில் ஈடுபடாமல் மறைமுகமாகவும், போரைத் தவிர்க்கும் வண்ணமே ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவளித்து வருகிறது. குறிப்பாக, தனது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை பற்றி சிந்திக்கும் வகையில் இவ்வாறு செயல்படுவதாக கூறப்படுகிறது. முழு விவரம்: இஸ்ரேல் Vs ஹிஸ்புல்லா: போரில் ‘ஈடுபடாமல்’ கவனமாக காய் நகர்த்தும் ஈரான் – காரணம் என்ன?