“வரி உயர்வால் மக்களின் தலையில் இடியை இறக்குவதுதான் விடியலை தருவதா?” – தமாகா காட்டம்

சென்னை: “திமுக அரசு பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுக்குள் இரண்டு முறை சொத்து வரியை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 150% வரை சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் மூன்றரை ஆண்டுகள் ஆட்சியில் சொத்து வரி உயர்த்தப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வரி உயர்வு என்ற பெயரில் ஏழை மக்களின் தலையில் இடியை இறக்குவது தான் விடியலை தருவதா?” என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் யுவராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களை அனைத்து வகைகளிலும் வாட்டி வதைப்பதற்கென்று ஒரு ஆட்சி கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை மேலும் 6% உயர்த்தி சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் சொத்து வரி மேலும் 6% உயர்த்தப்பட உள்ளது. பொதுமக்களை பாதிக்கும் வகையிலான இந்த சொத்து வரி உயர்வு கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

திமுக அரசு பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுக்குள் இரண்டு முறை சொத்து வரியை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 150% வரை சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் மூன்றரை ஆண்டுகள் ஆட்சியில் சொத்துவரி உயர்த்தப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது, கட்டுமான பொருள் தொடங்கி சொத்து வரி குடிநீர் மின்சார கட்டணம் ஆவின் பொருட்கள் விலை உயர்வு என எல்லா கட்டணமும் உயர்ந்து விட்டது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இந்த வரி உயர்வால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் பல்வேறு கட்ட தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு வாரி வழங்கி வெற்றி பெற்ற பின்பு மக்கள் மீது அனைத்து வரி உயர்வையும் அமல்படுத்தி உள்ள அரசு மக்களை வாட்டி வதைக்கும் செயல்களை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை கெடுதல் செய்யாமல் இருந்தால் போதும். மேலும், சென்னையில் பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் குப்பைகளை கொட்டினாலும் அல்லது எரித்தாலும், ரூ.1000 முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும்.

பொது இடங்களில் மரக்கடைவுகளை கொட்டினால், ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்றும், வியாபாரிகள் குப்பை தொட்டி வைக்காவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் பொது நிகழ்ச்சிகளை நடத்தி விட்டு அதை தூய்மைப்படுத்தாமல் சென்றால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்றும், பொதுமக்கள் பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஏற்கெனவே நெருக்கமான சாலைகளை கொண்ட சென்னையின் பல சாலைகளிலும் நடைபாதைகள் குப்பைகளாக காட்சியளிக்கின்றன. இதனால், பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் சிரமப்பட வேண்டிய நிலையே உள்ளது. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு குப்பை காடுகளாக உள்ள சென்னை தெருக்களை சுத்தம் செய்து, சென்னை மாநகரில் ஏற்றப்பட்டுள்ள சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும், மேலும் தமிழ்நாட்டின் பிற நகரங்களில் சொத்து வரி உயர்த்தும் முடிவை கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.