விக்கிரவாண்டியில் அக். 27-ல் நடைபெறும் தவெக மாநாட்டுக்கு 17 நிபந்தனைகளுடன் அனுமதி

விழுப்புரம் / சென்னை: நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் அக். 27-ம் தேதி நடத்த, 17 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி வழங்கி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது கட்சிக்கான முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை என்ற இடத்தில் செப். 23-ம்தேதி நடத்த திட்டமிட்டு, காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தார். சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், மாநாட்டுத் தேதி அக்டோபர் 27-க்கு தள்ளிவைக்கப்பட்டது. அந்த நாளில் மாநாடு நடத்த அனுமதி கோரி தவெக மாநிலப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விழுப்புரம் ஏடிஎஸ்பி திருமாலிடம் கடந்த 21-ம் தேதி மீண்டும் மனு வழங்கினார்.

இதையடுத்து, அக். 27-ம் தேதிமாநாடு நடத்த 17 நிபந்தனைகளுடன் காவல் துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அதன்படி, எக்காரணத்தை கொண்டும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பர பதாகைகள், கட்-அவுட்கள் வைக்கக் கூடாது, முதியவர்கள். கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பான இடவசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மாநாட்டுத் திடலில் ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டும். மாநாட்டுக்கு வருவோருக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளை போதுமான அளவு ஏற்படுத்தி தர வேண்டும்.

விஐபிக்கள் வரும் வழிகளில் எந்தவிதப் பிரச்சினைகளும் நிகழாமல், போதிய தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி, இந்த மாநாட்டுக்கு ஏடிஎஸ்பி திருமால் அனுமதி வழங்கிஉள்ளார். மாநாட்டுக்கான முதல்கட்ட அனுமதியின்போது 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பதவிகள் அறிவிக்கப்படும்… சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுச் செயலாளர் புஸ்ஸிஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநாட்டுக்கு எவ்வளவு பேரை அழைத்து வருவது, போலீஸாரின் நிபந்தனைகளை கடைபிடித்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்,“கட்சித் தலைமை அவ்வப்போது அளிக்கும் ஆலோசனையின்படி, மாநாட்டுப் பணிகளை நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும். அதிகாரப்பூர்வ மற்ற முறையில் வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம். மழை, புயல் என எந்த தடை வந்தாலும், திட்டமிட்டபடி மாநாடு நடக்கும். மாநாட்டுக்கு முன்பாகவே கட்சிப் பதவிகள் அறிவிக்கப்படும். பதவிக்காக என்னை அணுக வேண்டாம். யாருக்கு என்ன பதவி என்பதை தலைவர் முடிவு செய்வார். மாநாட்டில் கட்சி கரை வேட்டி அணிந்து பங்கேற்க வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.