வங்கதேச அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷகிப் அல்ஹசன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அவர் அடுத்த மாதம் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார். மிர்பூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அவருடைய கடைசி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாக இருக்கும். ஆனால், இப்போது அவர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் வங்கதேசத்துக்கு திரும்பினால் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது.
அவாமி லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் ஷகிப் அல் ஹசன். இப்போது அங்கு ஆட்சி மாற்றம் நடந்திருப்பதால், அவர் சொந்த நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கலவரம் மற்றும் கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பவர்களில் ஷகிப் அல் ஹசன் பெயரும் இருக்கிறது. ஒருவேளை ஷகிப் அல்ஹசன் வங்கதேசம் திரும்பினால் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் மைதானத்தில் அவர் மீது தாக்குதல் நடத்தப்படும் வாய்ப்பும் இருக்கிறது. இது குறித்து ஷகிப்அல் ஹசன் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை ஒன்றையும் வைத்திருக்கிறார். அதில் தனக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பங்கேற்க தன்னை அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் ஷகிப் அல்ஹசனின் இந்த கோரிக்கையை வங்கதேச கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது. ஒவ்வொரு தனிநபருக்கு பாதுகாப்பு கொடுக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி இல்லை வங்கதேச கிரிக்கெட் வாரியம் என இப்போதைய அதன் தலைவர் பரூக் அகமது அறிவித்துள்ளார். மேலும், ஷகிப் அல் ஹசன் வங்கதேசம் திரும்புவதும், தென்னாப்பிரிக்க தொடரில் ஆடுவதும் அவருடைய விருப்பம் தான். கைது மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கிரிக்கெட் வாரியம் எந்த உத்தரவாதத்தையும் கொடுக்க முடியாது என அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதனால் வங்கதேச அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷகிப்அல் ஹசன் வங்கதேசம் செல்வாரா? தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அவர் அந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை என்றால் கான்பூரில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியே அவருடைய கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியாக இருக்கும்.