தமிழ்த் திராவிட சமுதாயக் கட்சியின் அமைச்சர் (சரண் ராஜ்) ஊழல் வழக்கில் சிக்கித் தேர்தலில் தோற்கும் நிலைமை உருவாகிறது. `எப்படியும் தேர்தலில் பணம் கொடுத்து வென்றுவிடுவேன்’ என்று சபதம் எடுக்கும் அமைச்சர், அதற்கான பணிகளை முடுக்கிவிடுகிறார். ஆனால் அந்தப் பணம் கைமாறும் நேரத்தில் திருடப்பட்டு, அவரது கூட்டாளிகள் மர்மநபர்களால் கொல்லப்படுகிறார்கள். அதை விசாரிக்கும் அதிகாரபூர்வமற்ற விசாரணை அதிகாரியாக உள்ளே நுழைகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். இதற்கு மத்தியில் ஊரிலிருந்து சென்னைக்கு வேலை தேடிவரும் விஜய் ஆண்டனி இந்த சம்பத்துக்குள் எப்படி வந்து சேருகிறார், கொலைகளும் திருட்டுகளும் தடுக்கப்படுகின்றனவா, கொலைக்கான காரணம் என்ன என்பதே `ஹிட்லர்’ படத்தின் கதை.
படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வியைப் போல, தனக்கும் காதல் காட்சிக்கும் என்ன சம்பந்தம் என்பதாகக் கஷ்டப்பட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. குறிப்பாக ‘மௌனராகம்’ கார்த்தியாக வலம்வர நினைக்கும் அவரது மேனரிசம் சோதனை முயற்சி. டெம்ப்ளேட் தமிழ் சினிமா நாயகியாக வரும் ரியா சுமனுக்கும் அவருக்குமான கெமிஸ்ட்ரி சுத்தமாக வேலை செய்யவில்லை. பழக்கப்பட்ட ஆங்கிலமும் தமிழும் கலந்த மாடுலேஷனில் காவல்துறை ஆணையராக கௌதம் வாசுதேவ் மேனன் (புதுசா இருக்குண்ணே) சராசரியான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். வெகுநாள்களுக்குப் பிறகு சரண் ராஜ், 80-களின் கமர்ஷியல் தமிழ்ச் சினிமா வில்லன்களின் கலவையாக வந்துபோகிறார். ரெடின் கிங்ஸ்லியின் காமெடி முயற்சியும் சோதனையே! விவேக் பிரசன்னா, தமிழ், ஆடுகளம் நரேன் ஆகியோரும் வந்துபோகிறார்கள்.
நடந்தால் இசை, தூங்கினால் இசை, மூச்சுவிட்டால் இசை என இடைவெளியே இல்லாமல் செவியைப் பதம் பார்க்கிறது விவேக் – மெர்வின் கூட்டணியின் பின்னணி இசை. பாடல்கள் வேகத்தடை (படம் முடிவதற்குத்தான்!). ஒரு கமர்சியல் படத்துக்கான ஒளிப்பதிவினை கச்சிதமாக வழங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் நவீன்குமார்.ஐ. ஆரம்பத்தில் வரும் பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சியைச் சிறப்பாகவே வடிவமைத்திருக்கிறார். இருந்தாலும் வரைகலையில் வைக்கப்பட்ட மழை ஆற்றில் விழாமல் திரையில் மட்டுமே விழுவது செயற்கைத்தனம். கத்திரியை கீழேயே வைக்க முடியாமல் போராடியிருக்கும் படத்தொகுப்பாளர் சங்கத்தமிழனின் கஷ்டத்தை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது. இருந்தாலும் அனைத்தையும் முன்னரே சொல்லுகின்ற அந்த பிளாஷ்பேக் காட்சியையாவது பின்னால் வைத்திருக்கலாம். முரளி.ஜி சண்டைக் காட்சிகளைச் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார். (ஆனா எதுக்கு..?)
முதல் காட்சியிலேயே படத்தின் முடிவை யூகிக்கக்கூடிய அளவுக்கு அடித்துத் துவைத்துக் காயப்போட்ட பழைய பாணி கதைக்குப் புதிய சாயம் பூச முற்பட்டிருக்கிறார் இயக்குநர் தனா. அதில் ஒரு பாட்டு, ஒரு நகைச்சுவை, ஒரு ரொமான்ஸ், ஒரு சண்டை என மசாலாக்களால் நிரம்பிய திரைக்கதை எந்தச் சுவையும் இல்லாமல் நகர்கிறது. வருகிற போகிற கதாபாத்திரங்கள் எல்லாம் 150 கோடி, 300 கோடி என பாக்ஸ் ஆபிஸ் அறிக்கை கொடுப்பது போலப் பேசிச்செல்வது கூடுதல் அயர்ச்சியைத் தருகிறது. எழுத்தில் எந்தவித சிரத்தையும் இல்லாமல் தேமேவென நகரும் மெத்தனமான காட்சிகள் எவ்வித உணர்வுகளையும் கடத்தவில்லை. “ஆக்ஷன் கமர்ஷியல் படங்களில் லாஜிக் பார்க்காதீர்கள்” என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா பாஸு?!
மொத்தத்தில் தரமான ஒளிப்பதிவை மட்டுமே வைத்து பழைய கதை அமைப்பு, யூகிக்கக்கூடிய திருப்பங்கள், புதுமையற்ற கதை போக்கு எனப் படம் பார்க்கவரும் பார்வையாளர்களை பயம்புறுத்துகிறான் இந்த `ஹிட்லர்’.