தமிழ் சினிமா நிறைய நாயகிகளைப் பார்த்திருக்கு. குறிப்பா, 90-கள்ல. சிறகில்லாத தேவைதைகளா ஜொலிச்ச அந்த நாயகிகளைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துறதுதான் இந்த எவர்கிரீன் நாயகிகள் சீரிஸ். இந்த வாரம், நடிகை ரோஜா.
“சினிமால வெற்றிகளையே அதிகம் பார்த்த எனக்கு, அரசியல்ல நிறைய வலிகளையும் வேதனைகளையும் கொடுத்தாங்க. ஆனா, இதுக்கெல்லாம் பயந்து ஓடுற ஆள் நானில்லை. தவறான எண்ணத்துல என்னை சீண்டினா, யாரா இருந்தாலும் தைரியமா திருப்பி அடிப்பேன். நான் யார்னு நிரூபிப்பேன். ஏன்னா, நான் ரோஜா!” – தெலுங்கு பட வசனங்களையே மிஞ்சுற வகையில, அரசியல்ல ஹீரோயிஸம் காட்டி, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியவர்தான் ரோஜா. ஜெயலலிதா, விஜயசாந்திக்கு அப்புறமா, சினிமா மற்றும் அரசியல்னு ரெண்டு தளத்துலயுமே கோலோச்சிய ஒரே நடிகை ரோஜா மட்டும்தான்.
மாநிறமா இருந்தாலும், தனித்துவமான பிரகாசம், வசீகரமான சிரிப்பு, எடுப்பான பல்வரிசை, மாடர்ன் லுக், ஹீரோக்களுக்குச் சரிக்குச் சமமான உயரம், தேர்ந்த நடிப்புன்னு 1990-கள்ல தமிழ் சினிமாவோட உச்ச நட்சத்திரமா இருந்த நடிகை ரோஜா, இப்போ ஆந்திர அரசியல்ல தவிர்க்க முடியாத அரசியல்வாதி. அந்த மாநிலத்தின் தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு மாதிரியான சீனியர் தலைவர்களுக்கே செம டஃப் கொடுத்து அதகளம் பண்ற அதிரடி அரசியல்வாதியான ரோஜாவோட திருப்பங்கள் நிறைஞ்ச வாழ்க்கை கதையைத்தான் இந்தக் கட்டுரையில பார்க்கப் போறோம்.
ரோஜாவின் பூர்விகம் ஆந்திரா. இவங்களோட இயற்பெயர் ஶ்ரீலதா ரெட்டி. இவரோட அப்பா நாகராஜ ரெட்டி, தெலுங்கு சினிமாவுல டைரக்டராகணும்னு ஆசைப்பட்டார். ஆனா, அது நடக்காம போயிடுச்சு. அதனாலதான், 1991-ல் தன் மகளுக்கு சினிமால ஹீரோயினா நடிக்க வாய்ப்பு வந்ததுமே, உடனே அவர் பச்சைக்கொடி காட்டியிருக்கார். ‘பிரேம தபசு’ங்கிற தெலுங்குப் படத்துல நடிகர் ராஜேந்திர பிரசாத்துக்கு ஜோடியா அறிமுகமானாங்க ரோஜா. அந்த முதல் படமே சூப்பர் ஹிட்டாகவே, படபடனு நிறைய தெலுங்குப் படங்கள்ல கமிட் ஆனாங்க.
‘புலன் விசாரணை’, ‘கேப்டன் பிரபாகரன்’ அப்படின்னு ரெண்டு சூப்பர் ஹிட் ஆக்ஷன் படங்களைக் கொடுத்திருந்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, மூணாவதா ‘செம்பருத்தி’ங்கிற லவ் சப்ஜெக்ட் படத்தை எடுக்க ஆயத்தமானது அப்பதான். ஆந்திரா முகமான ஶ்ரீலதா ரெட்டியை தமிழ் சினிமாவுக்குக் கொண்டு வந்ததோடு, அவருக்கு ‘ரோஜா’னு புதுப்பெயர் சூட்டி, தமிழ் சினிமால ரோஜாவை ‘செம்பருத்தி’யா மலரவெச்சார் ஆர்.கே.செல்வமணி.
அப்போ இளம் ஸ்டாரா இருந்த பிரசாந்துக்கும் ரோஜாவுக்கும் இந்தப் படத்துல கெமிஸ்ட்ரி சூப்பரா வொர்க் அவுட் ஆச்சு. புதுமுகம் மற்றும் வேறு மொழி நடிகைங்கிற அந்நிய உணர்வு துளியும் ஏற்படாத வகையில நடிச்சு, தமிழ்ப் பெண்ணாவே ரசிகர்கள் மனசுல இடம் பிடிச்சாங்க ரோஜா. ‘செம்பருத்தி’ படம் சூப்பர் ஹிட்டாக, தமிழ் சினிமாலயும் கடகடனு நிறைய படங்கள்ல கமிட் ஆனாங்க.
ரோஜா நடிச்ச ரெண்டாவது தமிழ்ப் படம் ‘சூரியன்’. அதுல, சரத்குமாருக்கு ஜோடியா, பாட்டு, ரொமான்ஸ், நடிப்புனு எல்லா ஏரியாவுலயும் ரோஜா பட்டையைக் கிளப்பினாங்க. இந்தப் படமும் பிளாக்பஸ்டர் வெற்றியடையவே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையா உயர்ந்தாங்க ரோஜா. ‘உழைப்பாளி’ படத்துல சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியா, தன் மூணாவது படத்துலயே பெரிய ஜாக்பாட் கிடைச்சது ரோஜாவுக்கு. இவ்ளோ பெரிய வாய்ப்பு தேடி வரும்போது, ரோஜா சும்மா விடுவாங்களா என்ன? ‘ஒரு கோளக்கிளி சோடி தன்னை சூடுது சூடுது மானே’னு ரஜினியுடன் இவங்க ஆடிய டூயட் பாட்டுக்கு, தியேட்டர்ல ரசிகர்களும் துள்ளிக்குதிச்சாங்க. ‘உழைப்பாளி’ படத்துல ரஜினிக்கு எல்லா விதத்துலயும் ஈடு கொடுத்து நடிச்சிருந்தாங்க ரோஜா. இந்த ரீல் ஜோடிக்கு ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பைக் கொடுத்ததால, அடுத்த வருஷமே ‘வீரா’ படத்துலயும் இந்த ஜோடி சூப்பரா வொர்க் அவுட் ஆச்சு.
ஃபேமிலி, ஆக்ஷன், கிளாமர், ரொமான்ஸ்னு எல்லாவிதமான ரோல்களும் ரோஜாவைத் தேடி வந்துச்சு. அப்போதைய முன்னணி நடிகர்கள் எல்லார்கூடவும் ஜோடியா நடிச்ச ரோஜா, ‘அதிரடிப்படை’, ‘இந்து’, ‘மக்களாட்சி’, ‘ஆயுதபூஜை’னு நிக்க நேரமில்லாம நிறைய ஹிட் படங்கள்ல நடிச்சாங்க. அதேநேரம், தெலுங்குலயும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடியா நடிச்சு, டோலிவுட்லயும் முன்னணி நடிகையா வலம்வந்தாங்க. இந்தப் பரபரப்புக்கு நடுவுல, கன்னடா மற்றும் மலையாள சினிமாலயும் ரோஜா கால் பதிச்சாங்க. ‘பரம்பரை’ படத்துல, கொங்கு மண்ணுக்கே உரிய குறும்பும் வீரமும் நிறைஞ்ச துணிச்சலான பெண்ணா நடிச்சு பிரமாதப்படுத்தியிருப்பாங்க.
1990-கள்ல நிறைய நடிகர்களுடன் ரோஜா ஜோடியா நடிச்சிருந்தாலும், பிரபுதேவா – ரோஜா ஜோடிக்குக் கூடுதலான வரவேற்பு கிடைச்சது. காரணம், ரெண்டு பேருடைய நடனத் திறமைதான். ‘ராசய்யா’ பாத்துல இவங்க ரெண்டு பேரும் டான்ஸ் ஆடிய ‘மஸ்தானா மஸ்தானா’ பாட்டும், ‘இந்து’ படத்துல வர்ற ‘ஏய் குட்டி முன்னால நீ’ பாட்டும் பட்டிதொட்டியெல்லாம் ஹிட் ஆச்சு. ‘ஆறு’ படத்துல வர்ற ‘சவுண்டு சரோஜாவை 2கே கிட்ஸூக்கு நல்லா தெரியும். ஆனா, 90’ஸ் கிட்ஸூக்கு ரொம்பவே பரிச்சயமான சவுண்டு சரோஜான்னா, அது ‘ஏழையின் சிரிப்பில்’ படத்துல ரோஜா நடிச்ச ‘சரோஜா’ கேரக்டர்தான். அலட்டலான கேரக்டர் பெண்ணா, போல்டா நடிச்ச ரோஜா, அந்தப் படத்துல, ‘கருகரு கருப்பாயி’ பாட்டுல பிரபுதேவாகூட சேர்ந்து ஆடிய டான்ஸை… 2கே கிட்ஸூம் வைப் பண்ணி கொண்டாடுறாங்க. ரோஜாவோட டான்ஸை ஊர் உலகமே பாராட்டிப் பேசுறப்போ, பிரபுதேவா எதுவும் சொல்லாம இருப்பாரா என்ன?
“என்கூட டான்ஸ் ஆடின ஹீரோயின்ஸ்ல எனக்கு செம டஃப் கொடுத்தது ரோஜாதான். அவங்ககூடா டான்ஸ் ஆடுறதுன்னா கொஞ்சம் எக்ஸ்ட்ரா எஃபெர்ட் போடுவேன்”னு பிரபுதேவா பெருமிதமா சொல்ற அளவுக்கு, டான்ஸ்ல பொளந்து கட்டினாங்க ரோஜா. இப்படி, எல்லா ஜானர்லயும் டஃப் கொடுத்த முக்கியமான ஹீரோயினா தடம் பதிச்சா ரோஜாவுக்கு, 1997-ல இயக்குநர் விக்ரமன் டைரக்ஷன்ல நடிச்ச ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ திரைப்படம், இவங்க கரியர்ல மைல்கல்லா அமைஞ்சது. அஜித், கார்த்திக்னு ரெண்டு சூப்பர் ஆக்டர்களுக்கு நடுவுல ‘ராதா’ அப்படிங்கற படு ஹோம்லியான கதாபாத்திரத்துல உணர்வுபூர்வமா நடிச்சு, தமிழ்க் குடும்பங்களின் மனசுல சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தாங்க. அதுமட்டுமா, சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசின் விருதையும் இந்தப் படத்துக்காக ரோஜா வாங்கினாங்க.
இதன் தொடர்ச்சியா, ‘என் ஆசை ராசாவே’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘சந்தித்த வேளை’னு நிறைய ஹிட் படங்கள்ல நடிச்சாங்க. ‘கோட்டை மாரியம்மன்’ படத்துல அம்மன் வேஷத்துலயும் பக்காவா பொருந்திப்போன ரோஜா, பத்து வருஷத்துல நூற்றுக்கும் அதிகமான படங்கள்ல ஹீரோயினா நடிச்சு, தமிழ் மற்றும் தெலுங்குல சக்சஸ்ஃபுல் நடிகையா வலம் வந்தாங்க.
தன் சினிமா கிராஃப்ல மட்டுமில்லாம, காதல் கிராஃப்லயும் ரெக்கார்டு பண்ணவங்கதான் ரோஜா. ஆமாங்க… ஆர்.கே.செல்வமணி – ரோஜா தம்பதி, தமிழ் சினிமா நட்சத்திர தம்பதிகள்ல முக்கியமான இடத்தைப் பிடிக்க, இவங்க ரெண்டு பேருக்கும் இடையேயான ஆழமான காதல்தான் காரணம். இருக்காதா பின்ன… 11 வருஷ காதல்னா சும்மாவா? ‘செம்பருத்தி’ படத்துல நடிக்கும்போதுதான் செல்வமணிக்கும் ரோஜாவுக்கும் காதல் மலர்ந்திருக்கு. அதை பத்தி ஒருமுறை விகடன் பேட்டியில சொன்ன ரோஜா, “யாரா இருந்தாலும் நான் படபடன்னு பேசுற ஆளு. செல்வமணியோ ரொம்ப கூச்ச சுபாவம் உள்ளவர். இந்த குணம்தான் எனக்கு இவர்மீது காதல்வர முக்கியமான காரணம்” அப்படின்னு சொல்லிருக்காங்க.
செல்வமணியைவிட, ரோஜா பத்து வயசு இளையவர். ரெண்டு பேருமே வெவ்வேறு மாநிலத்தை, சமூகத்தை சேர்ந்தவங்க. இந்தக் காரணங்களால, இவங்க ரெண்டு பேரோட காதல் கைகூடுறதுல சில சிக்கல்கள் ஏற்பட்டிருக்கு. ஆனா, இதையெல்லாம் தங்களோட மன உறுதியால வென்றிருக்காங்க. செல்வமணியும் ரோஜாவும் காதலிச்சப்போ, ரோஜா பீக்ல இருந்தாங்க. அப்போ, “நம்ம கல்யாணத்தை காரணம் காட்டி உன்னோட இந்த பீக் கரியரை டிஸ்டர்ப் பண்ணமாட்டேன். உனக்காகக் காத்திருப்பேன்” அப்படின்னு சொன்ன செல்வமணி, ரோஜாவுக்காக 11 வருஷங்கள் வெயிட் பண்ணிருக்கார். கடைசியா 2002-ம் வருஷம்தான் இவங்களோட கல்யாணம் நடந்திருக்கு.
ஆழமான புரிதலுடன் காதலிச்சு கல்யாணம் பண்ண இவங்களோட இல்லறத்துல, ஆரம்பகாலத்துல நிறைய கருத்து வேறுபாடுகள் வந்திருக்கு. அதை இவங்க சரிசெஞ்ச விதத்தைப் பத்தி, ‘டி 40’ங்கிற சினிமா நிகழ்ச்சியில ஓப்பனப்பா பேசினாங்க. அதை ரீவைண்டு பண்ணிக் கேட்கலாமா?
“காதலிச்சப்போ சந்தோஷத்தை மட்டுமே பகிர்ந்துகிட்டோம். இதுவே, கல்யாணத்துக்கு அப்புறமா ரெண்டு பேருக்கும் இடையில அடிக்கடி சண்டை வந்துக்கிட்டே இருந்துச்சு. அப்பதான், மனைவிகிட்ட தோத்துப்போனா வாழ்க்கையில ஜெயிக்கலாம்ங்கிற உண்மை எனக்குப் புரிஞ்சது. அதுக்கப்புறமா, எங்களுக்குள்ள பிரச்னையே பெரிசா வர்றதில்லை”னு செல்வமணி மேடையில சொன்னப்போ, ரஜினிகாந்த் உட்பட பலருமே கைதட்டி ஆரவாரம் செஞ்சாங்க. ஆமாங்க, கல்யாணத்துக்கு அப்புறமா ரோஜாவுக்கு எல்லாமுமா மாறிய செல்வமணி, மனைவியின் அரசியல் வளர்ச்சிக்கும் பக்கபலமா இருக்கார். “என் கணவர்கிட்ட ஆணாதிக்கத்தைச் சுத்தமா பாக்க முடியாது” அப்படின்னு பெருமிதத்தோட பல இடங்கள்ல ரோஜா பேசியிருக்காங்க. இவங்களோட காதல் வாழ்க்கைக்குச் சாட்சியா அன்ஷுமாலிகா, கிருஷ்ணா லோஹித் அப்படின்னு ரெண்டு குழந்தைகளும் இருக்காங்க.
கல்யாணத்துக்கு அப்புறமா, ‘அரசு’, ‘சகுனி’, ‘காவலன்’ போன்ற பல திரைப்படங்கள்ல சப்போர்ட்டிங் கேரக்டர்ல ரோஜா நடிச்சாங்க. இன்னொரு பக்கம், டிவி நிகழ்ச்சிகள்ல நடுவரா கலந்துக்கிட்டாங்க. இதுக்கிடையே, யாரும் எதிர்பார்க்காத வகையில, அரசியல் களத்துல நுழைச்சு, அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கொடுத்தாங்க. ஆனா, சினிமா கரியரைப்போல, அரசியல் களம் ரோஜாவுக்கு அவ்ளோ எளிதானதா அமையல.
1999-ம் வருஷம் தெலுங்கு தேசம் கட்சியில சேர்ந்து அரசியல் பயணத்தைச் ஆரம்பிச்ச ரோஜா, “தன் கட்சியினரே தன்னை வளர விடாம சதி பண்ணி கஷ்டப்படுத்தினாங்க” அப்படின்னு வருத்தப்பட்டுப் பேசினாங்க. அந்தக் கட்சியின் சார்புல 2009-ம் வருஷம் நடந்த சட்டமன்றத் தேர்தல்ல நின்னு தோல்வியைத் தழுவினாங்க. ஒருகட்டத்துல மனம் நொந்துப்போய் தெலுங்கு தேசம் கட்சியிலேருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில சேர்ந்தாங்க. அங்கயும் இவங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காததால, 2011-ம் வருஷம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில சேர்ந்தாங்க. அதுக்கு அப்புறமாதான் ரோஜாவோட அதிரடி அரசியல் ஆரம்பிச்சது. ஆரம்பகாலத்துல உரக்கப் பேசவே கூச்சப்பட்ட ரோஜா, மைக் பிடிச்சாலே ஸ்பீக்கர் அதிரும் வகையில அரசியல்வாதியா அதிரடி காட்டினது அவரே எதிர்பார்க்காத ஆச்சர்யம்தான்.
2014-ம் வருஷம் சட்டமன்றத் தேர்தல்ல நகரி தொகுதியில போட்டியிட்டு ஜெயிச்சாங்க. சட்டமன்றத்துக்குள்ளயும், பொது வெளியிலயும் அதிரடி அரசியல்வாதியா, அனல் பறக்கும் பேச்சுக்களால அரசியல் தலைவர்களை மிரள வெச்சாங்க. சட்டமன்றத்திலேருந்து ஒரு வருஷம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது, கைது செய்யப்பட்டதுனு தலைப்புச் செய்திகள்ல இடம்பெறும் அளவுக்கு அரசியல்லயும் ரோஜா வளர்ந்தாங்க. 2019-ம் வருஷம் நடந்த சட்டமன்றத் தேர்தல்ல மறுபடியும் நகரி தொகுதியில ஜெயிச்ச ரோஜா, அப்போ ஆந்திர முதல்வரா இருந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில ரெண்டு வருஷங்கள் அமைச்சராவும் இருந்தாங்க. இந்த 2024-ம் வருஷம் நடந்த சட்டமன்றத் தேர்தல்ல தோல்வியடைஞ்ச ரோஜா, இதுக்காக வருத்தப்பட்டு உட்காரலை. முன்பைவிட இன்னும் வலிமையுடன் அரசியல் பயணத்தைத் தொடரும் உத்வேகத்துடன் செயல்படறாங்க. இதுக்கிடையே எதிர்க்கட்சி வரிசையில இருந்தப்பவும் சரி, அமைச்சரா இருந்தப்பவும் சரி… ரோஜா எதிர்கொண்ட விமர்சனங்கள் மிகவும் மோசமானவை.
ரோஜாவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பத்தியும், அவரின் புகைப்படத்தைத் தவறா சித்திரிச்சும் எதிர்க்கட்சியினர் பேசினாங்க. இதெல்லாம் அவரை ரொம்பவே வேதனைக்கு உள்ளாக்குச்சு. ஆனா, அதுக்காகவெல்லாம் வருத்தப்பட்டு ரோஜா அரசியலிலிருந்து பின்வாங்கல. “எதையும் உறுதியுடன் எதிர்கொள்வேன்” அப்படினு தொடர்ந்து களத்துல நின்னாங்க. இந்த மாதிரியான இக்கட்டான நேரத்துல ரோஜா உச்சரிக்கத் தவறாத விஷயம் என்னன்னா… “அரசியல்ல இப்பவும் எனக்கெதிரா குடைச்சல் கொடுக்கிறாங்க. ஆனா, என்னை அடக்க நினைச்சா, ‘பவுன்ஸ் பேக்’ ஆகி இன்னும் வேகமா எதிர்வினையாற்றுவேன்” அப்படின்னு சரவெடியாக வெடிப்பாங்க.
இப்போ சட்டமன்றத் தேர்தல்ல ஏற்பட்டிருக்கிற தோல்விக்கு அப்புறமா, ரோஜாவின் அடுத்த மூவ் எப்படி இருக்கும் அப்படிங்கிறதுதான் பலரின் கேள்வியா இருக்கு. இதுக்கு, “த கேம் இஸ் நாட் ஓவர் எட்’ அப்படினு கூலா சொல்லி, அடுத்த இன்னிங்ஸூக்கு இன்னும் வலிமையுடன் செயல்பட தயாராகிட்டிருக்காங்க ரோஜா. ஆமாங்க, ரோஜா எப்பவுமே ‘போல்டு அண்டு ஸ்ட்ராங்கான வுமன்’ அப்படிங்கிறதுல யாருக்குமே மாற்றுக் கருத்திருக்காது. ஏன்னா, ரோஜானாலே ‘ஃபவுன்ஸ் பேக் நாயகி’தானே(!)
– நாயகிகள் வருவார்கள்!