காலே,
இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த இலங்கை கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 306 ரன்கள் அடித்திருந்தது. மேத்யூஸ் 78 ரன்களுடனும், கமிந்து மென்டிஸ் 51 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதனையடுத்து 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி சிறப்பாக விளையாடி வருகிறது. மேத்யூஸ் 88 ரன்களிலும், டி சில்வா 44 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதன்பின் கை கோர்த்த குசல் மென்டிஸ் – கமிந்து மென்டிஸ் இணை சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது. இதன் மூலம் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 553 ரன்கள் குவித்துள்ளது. சதம் அடித்து அசத்திய கமிந்து 154 ரன்களுடனும், குசல் 85 ரன்களுடனும் உள்ளனர்.
முன்னதாக இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் கமிந்து மென்டிஸ் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-
கமிந்து அறிமுகம் ஆனதிலிருந்து ஒரு போட்டியின் ஏதேனும் ஒரு இன்னிங்சில் 50+ ரன்களை அடித்துள்ளார். இதன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுகம் ஆனதில் இருந்து தொடர்ந்து 8 டெஸ்டுகளில் ஏதாவது ஒரு இன்னிங்சில் 50 ரன்னுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.