தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகால திரைப்பயணத்தில், கெத்தாக பரிணமித்திருக்கும் அட்டகத்தி தினேஷ் இன்று தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
கூத்துப் பட்டறையில் தனது சினிமா கனவை நோக்கி அடியெடுத்துவைத்த தினேஷ், ஆடுகளம், மௌனகுரு போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில், இயக்குநர் பா.ரஞ்சித்தின் முதல் படமான அட்டகத்தியில், நாயகனாக அறிமுகமானார்.
படத்தில் ரஞ்சித்தின் அரசியல் குறியீடுகள் ஒரு லேயரில் சென்றுகொண்டிருக்க மறுபக்கம் ஜாலியான கல்லூரி இளைஞர் கதாபாத்திரத்தில் காதல் செய்வது, லவ் சொல்லப்போய் மொக்கை வாங்குவது, நண்பர்களுக்குள்ளான அரட்டை என கிராமத்திலிருந்து வரும் பெரும்பாலான இளைஞர்களின் அசலாக நடித்து முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் பதிந்தார். கூடவே, ரசிகர்களால் `அட்டகத்தி தினேஷ்’ என அடையாளப்படுத்தப்பட்டார்.
அங்கிருந்து, நேராக குக்கூ என்ற படத்தில் தான் அட்டகத்தி மட்டுமில்ல என விழிச் சவால் உடைய நபராக சவாலான கேரக்டரை ஏற்று நடித்தார். விழிச் சவால் உடையவர்களின் உலகம் எப்படியிருக்கும், அவர்களில் காதல் ஜோடியின் உலகம் எத்தகையது என்பதைக் காட்டி அழகின் இலக்கணங்களை உடைத்திருக்கும் இயக்குநர் ராஜுமுருகனின் `குக்கூ’.
இதில், தன்னுடைய நடிப்பால் சினிமா ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தவர், வெற்றிமாறனின் விசாரணை படத்தில், யாருடா இந்த நடிகர் நின்று பேசவைத்தார். படத்தில் போலீஸ் அதிகாரியிடம் அடிவாங்கும் காட்சியிலும் சரி, நீதிமன்றத்தில் போலீஸிக்கெதிராக உண்மையை உடைத்துப் பேசும் இடத்திலும் சரி பார்வையாளர்களின் விழிகளை விரியவைத்திருப்பார்.
கூடவே, இந்தப் படத்தில் தினேஷுக்கு ஏன் விருது தரவில்லை என தனது அபார நடிப்பால் முணுமுணுக்கவும் வைத்தார். தினேஷ் இந்தப் படத்தில் எவ்வளவு கடுமையாக உழைத்தார் என்பதை வெற்றிமாறனே நிறைய இடங்களில் பதிவும் செய்திருப்பார். அதைத்தொடர்ந்து, கபாலியில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் படம் பார்த்தவர்கள் மனதில் பதியுமளவுக்கு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தினார்.
அடுத்தடுத்து தன்னுடைய கரியரில் ஒருநாள் கூத்து, உள்குத்து, அண்ணனுக்கு ஜே, களவாணி மாப்பிள்ளை போன்ற படங்கள் என பல ஏற்ற இறக்கங்களைக் கண்ட தினேஷ், இயக்குநர் அதியன் ஆதிரையின் முதல் படமான `இரண்டாம் உலகப்போரின் கடைசி’ குண்டு படத்தில், இரும்புக் கடையில் லாரி டிரைவராக நடித்தார்.
படத்தில் தனது முதலாளியிடம், `சொந்தம் பந்தம் யாரையும் பாக்காம இங்கையே இவனுக்காக அப்பன், புள்ளன்னு உழச்சி உழச்சி சாவுறமே நாங்கதான் முறுக்கு கம்பிங்க’ என தனது உரிமையைக் கேட்கும் நாபராக வெங்கெண்டெழும் காட்சியில் தோழராக தினேஷ் வெளிப்பட்டிருப்பார்.
இவ்வாறு தனது திரைப்பயணத்தில் ஏற்ற இறக்கங்களைக் கண்ட தினேஷுக்கு 2024-ம் ஜே. பேபி, லப்பர் பந்து என வெற்றிப்படங்களால் சிறப்பாக அமைந்திருக்கிறது. பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவான ஜே.பேபி படத்தில் அண்ணனுடன் தாயைத் தேடும் கதாபாத்திரத்தில் தாய்மீது பாசமிகு மகனாக நடித்திருப்பார்.
ஜே. பேபிக்கு அடுத்து தினேஷ் அப்படியே அதற்கு நேர்மாறாக லப்பர் பந்து படத்தில் கெத்தாக களமிறங்கியிருக்கிறார். 40 வயதுக்கு மேற்பட்ட தோற்றத்தில், அழுக்கு லுங்கியுடன் கிரிக்கெட் கிரவுண்டில் `நீ போட்டு வச்ச தங்க குடம்’-னு கேப்டன் சாங் எரியோட ஸ்க்ரீன்ல வரும்போது விசில் சத்தங்களோடு ஆர்ப்பரிக்காத ரசிகர்களே இல்லை.
சினிமா ஹீரோ என்றாலே இப்படியெல்லாம் இருப்பார்கள் என்று உருவாக்கப்பட்டிருக்கும் இலக்கணங்களுக்குள் வராமல் சக எளிய மனிதர்களின் வசீகர தோற்றத்தை உடைய தினேஷ், திரையில் அளப்பறையைக் கூட்டாத என்ட்ரி, எமோஷனல் காட்சிகளில் தடுமாற்றமான குரலில் வரும் அழுகை, நம்மள மாதிரியே பேசுகிறாரே என்று எண்ணவைக்கக் கூடிய வசன உச்சரிப்பு ஆகியவற்றால் எதார்த்த நடிகராக மனதில் பதிகிறார்.
தான் நடிக்க வந்த சமயத்தில் திரைப் பயணத்தைத் தொடங்கிய நடிகர்கள் சிலர் சமகாலத்தில் கமெர்ஷியலாக வெற்றிகளைக் குவித்தாலும், அட்டகத்தி முதல் லப்பர் பந்து வரை ஒன்றுக்கொன்று வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று தனித்துவமான கதைக் களங்களைத் தேர்வுசெய்துவரும் தினேஷ், அடுத்தவொரு வித்தியாசமான கதைக்களமாக அதியன் ஆதிரையின் இயக்கத்தில், `தண்டகாரண்யம்’ படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படமும் வெற்றியடைய பிறந்தநாள் வாழ்த்துகள் கெத்து தினேஷ்!
தினேஷ் நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எதுவென்பதைக் கமெண்ட்டில் பதிவிடுங்கள்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…