1992-ம் ஆண்டு சிறுவனாக இருக்கும் பாலசுப்பிரமணி, நடிகர் பிரபுதேவாவின் தீவிர ரசிகராக இருக்கிறான். வளர வளர அவரைப் போலவே உடை, தோற்றம், நடனம், உடல்மொழி எனத் தன்னை மாற்றிக்கொள்கிறான் பாலசுப்பிரமணி. பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது ஜானகி என்ற பெண், பாலசுப்பிரமணியை விரும்புகிறாள். ஆனால், பாலசுப்பிரமணி வேறு ஒரு பெண்ணை விரும்புவதால், அக்காதல் கைகூடாமல் போகிறது. மறுபுறம், பாலசுப்பிரமணியன் (இதுவும் பிரபு தேவாதான்… ஏதே?!) வளர்ந்து, கதாநாயகன் ஆகும் கனவோடு, கோடம்பாக்கத்தில் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்.
மறுபுறம், பிரபல பாடகியான வேதிகாவுக்கும் பிரபல தாதாவான காசிமேடு மைக்கேலுக்கும் மோதல் வருகிறது. சிறிது நேரத்திலேயே அதே மைக்கேலுக்கும் பாலசுப்பிரமணிக்கும் மோதல் ஏற்படுகிறது. இருவரையும் துரத்துகிறார் மைக்கேல். இப்பிரச்னைகளைச் சமாளித்து, பாலசுப்பிரமணியன் ஹீரோ ஆனாரா என்பதோடு, பாலசுப்பிரமணிக்கும் வேதிகாவிற்கும் என்ன தொடர்பு என்பதுதான் படத்தின் கதை…
….என்று `உறுதியாக ஒரு கதைதான்’ என்று சொல்ல முடியாத அளவிற்கு, கால் மணி நேரத்திற்கு மூன்று முறை இண்டிகேட்டரை மாற்றி மாற்றிப் போட்டு, எட்டுத் திசைக்கும் வண்டி திரும்ப, ஒருகட்டத்தில் கதையைக் கண்டுபிடிப்பதே பெருங்கதையாவதே இப்படத்தின் கதை. பார்வையாளர்களுக்கு இத்தகைய பயிற்சிகள் அளிப்பது தமிழ் சினிமா வரலாற்றில் ஏற்கனவே பல முறை நடந்திருந்தாலும், இதுதான் ஃபர்ஸ்ட் டைம்!
முழுப் படத்தையும் ஒன்மேன் ஆர்மியாக தோளில் தாங்கியிருக்கிறார் பிரபுதேவா. வழக்கம்போல நடனத்தில் பட்டையைக் கிளப்பியதோடு, ஆக்ஷனிலும் கலக்கியிருக்கிறார். குறும்பான உடல்மொழியும், வாய்ஸ் மாடுலேஷன்களும் வெகு சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கின்றன. ஏனைய இடங்களில்… “ஒருதடவ சிரிச்சா விட்றணும் மாஸ்டர்…” என நம்மைப் பொறுமி பொங்க வைக்கின்றன. உணர்வுபூர்வமான இடங்களில் தேவையான நடிப்பை வழங்கியதோடு, நடனத்திலும் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார் வேதிகா. ‘கலாபவன்’ ஷாஜோன் தொடக்கக் காட்சியில் மட்டும் மிரட்டுகிறார். விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக் ஆகியோர் குடியும் கையுமாக க்யூவில் வந்து, ‘யாரையும் சிரிக்க வைக்கக்கூடாது’ என்று சபதமேற்று, அதில் வென்று ‘சபத க்யூ’வாக நம் மனதில் நிற்கிறார்கள்! ஜெயபிரகாஷ், ரியாஸ் கான், மைம் கோபி, ராஜீவ் பிள்ளை, வையாபுரி என எல்லா துணை நடிகர்களும் ‘எந்தப் பயனுமில்லாமல்’ வந்து போகிறார்கள்.
ஜிது தாமோதரின் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சிக்கும் பளபளப்பையும், ரிச்னஸையும் கொடுத்திருக்கிறது. நிஷாத் யூசுப்பின் படத்தொகுப்பு மொழி தொடக்கக் கட்ட கதைசொல்லலுக்குக் கைகொடுத்து ரசிக்க வைத்தாலும், சிறிது நேரத்திலேயே ஒரே மாதிரியான ‘எடிட்டிங் டூல்களை’ மீண்டும் மீண்டும் பயன்படுத்தி அயற்சியைத் தந்துவிடுகிறது. டி.இமான் இசையில் எத்தனை பாடல்கள் வந்தன, வந்துகொண்டிருக்கின்றன, இன்னும் வரும் என எண்ணி முடிப்பதற்குள் படம் முடிந்துவிட்டது. அவரின் துள்ளலான பின்னணி இசை சில காட்சிகளில் மட்டும் ரசிக்க வைக்கின்றது.
தொடக்கத்தில் கதை என்ற வஸ்துவைக் கையில் வைத்திருந்தாலும், சிறிது நேரத்திலேயே அதை தூக்க்க்…கி எறிந்துவிட்டு, ஃப்ரேம் போன போக்கில் திரைக்கதை நகர்கிறது. அதிரடியாக சில கதாபாத்திரங்கள் அறிமுகமாகின்றன. அவையும் சிறிது நேரத்தில் காணாமல் போய்விடுகின்றன. ஒரு பாட்டு, அதற்கு டான்ஸ், ஒரு சண்டைக் காட்சி, ஒரு காமெடி (!) என வரிசையாகப் பூக்கட்டுவது போல, மாற்றி மாற்றிக் கட்டி, அதை நம் காதுகளில் சுற்றியிருக்கிறார் இயக்குநர். பாட்டுக்குள் சண்டை, சண்டைக்குள் பாட்டு, பாட்டுக்குள் பாட்டு, சண்டைக்குள் சண்டை எனப் ‘பிரிக்க முடியாதது எது?’ என்ற கேள்விக்குப் பதிலாக மாறி நிற்கிறது இப்படத்தின் பாடல்களும், சண்டைக்காட்சிகளும்.
படத்தின் ஹீரோவும், ஏற்கெனவே ஹீரோவாக இருக்கும் பிரபு தேவாவும் ஒரே போலப் பிரபுதேவாவாகவே இருப்பது பார்வையாளர்களுக்கு மட்டும்தான் தெரிகிறது. திரையில் யாருக்குமே தெரியாமல் இருப்பது எப்படி என்பது அந்த ‘யுனிவர்ஸில்’ உள்ளவர்களுக்கே வெளிச்சம்!
ஹீரோவாக வேண்டும் என்ற பெருங்கனவோடு போராடும் கதாநாயகன் குறித்து தொடக்கத்தில் மட்டுமே உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்யப்படுகிறது. சிறிது நேரத்திலேயே அந்தப் பெருங்கனவை, கிட்சனில் பெருங்காய டப்பாவைத் தொலைத்துவிட்டுத் தேடுவதுபோல தேட வேண்டியதாக இருக்கிறது. வேதிகா கதாபாத்திரம் மட்டுமே சீரியஸாக எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், அக்கதாபாத்திரமும் ஆங்காங்கே வழி தவறுகிறது. இறுதிக்காட்சிக்கான ஐடியா நன்றாக இருந்தாலும், அழுத்தமான திரைக்கதை இல்லாமல் போனதாலும், அந்தரத்தில் பறக்கும் கதாபாத்திரங்களாலும் பாதி தாக்கத்தைக் கூட அந்தக் காட்சி கடத்தவில்லை.
ஒரு மணி நேரம் பிரபுதேவா டான்ஸ், முக்கால் மணி நேரம் பிரபுதேவா ஃபைட், அரை மணி நேரம் பிரபுதேவா மிமிக்ரி போன்றவற்றை ஒரே நேர்கோட்டில் ஓடவிட்டாலும், கைகளைக் கட்டிக்கொண்டு, கண்கொட்டாமல் பார்ப்பேன் என அடம்பிடிக்கும் பிரபுதேவா ரசிகர்களை இந்த `பேட்ட ராப்’ துள்ளிக் குதிக்க வைக்கத் துளியூண்டு வாய்ப்பிருக்கிறது.