எட்டு ஆண்டுகளில் முதன்முறையாக ஐஸ்லாந்தில் தோன்றிய போலார் கரடி.
ஆனால், அந்த போலார் கரடி காவல்துறையால் துரதிஷ்டவசமாக சுட்டுக் கொல்லப்பட்டது. ஐஸ்லாந்தில் வசித்து வந்த ஒரு பெண், தனது வீட்டின் அருகில் ஒரு போலார் கரடி வலம் வருவதை பார்த்து அச்சமடைந்துள்ளார்.
அரிதாகத் தோன்றிய அந்தக் கரடி காண்பதற்கு அச்சுறுத்தலாக இருந்ததால் அப்பெண் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சுற்றுச்சூழல் ஏஜென்சியுடன் போலார் கரடி தொடர்பாக கலந்து பேசிய பிறகு ஒரு முடிவுக்கு வந்தனர். இதையடுத்து செப்டம்பர் மாதம் 19-ம் தேதி அன்று வடமேற்கு ஐஸ்லாந்தில் வைத்து அந்தக் கரடி சுட்டுக் கொல்லப்பட்டது. இதன் பிறகு சுற்றுச்சூழல் ஏஜென்சியினர், “இதை நாங்கள் விரும்பி ஒன்றும் செய்யவில்லை கரடியின் வருகையால் மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறார்கள், அதுமட்டுமன்றி அக்கரடியானது ஒரு வயதான பெண்மணியின் வீட்டிற்கு அருகாமையில் வளம் வந்தது.
அந்த வீட்டின் முன் இருந்த குப்பைத் தொட்டியை அது கிளறியது. இதைக்கண்ட அந்த வயதான பெண்மணி அவருடைய அறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டு தன்னுடைய மகளுக்கு அலைபேசியின் மூலமாக இதை தெரிவித்தார். பிறகு அவருடைய மகள் எங்களைத் தொடர்பு கொண்டார். இத்தனை அச்சங்களை ஏற்படுத்திய காரணங்களால்தான் இந்த முடிவை நாங்கள் மேற்கொண்டோம். இந்த போலார் கரடிகள் பூர்வீகமாக ஐஸ்லாந்தில் வாழக்கூடியவை அல்ல. ஆனால், சில சமயங்களில் இது கிரீன்லாந்தில் இருந்து வந்து செல்கின்றன” என்றனர்.
2016 முதல் 2024 வரை இத்தனை ஆண்டுகளில் இதுவே முதன்முதலில் தோன்றிய போலார் கரடி ஆகும் .சுட்டுக் கொல்லப்பட்ட கரடியின் தற்போதைய நிலை என்ன ?
150 முதல் 200 கிலோ வரை எடை கொண்ட இந்தக் கரடி, மேலாய்வுக்காக ஐஸ்லாந்தின் இயற்கை வரலாற்று நிறுவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்று அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது. அதுமட்டுமன்றி விஞ்ஞானிகள் கரடியை ஒட்டுண்ணிகள் மற்றும் நோய்த் தொற்றுகளுக்குப் பரிசோதிக்கவும், அதனுடைய உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை கண்டறியவும்,
அதனுடைய தோளையும் மண்டை ஓட்டின் நிலையினை அறிந்து அதைப் பாதுகாக்கவும் திட்டமிட்டுள்ளனர். இவ்வகை போலார் கரடிகள் நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு வகை இனமாக இருந்தாலும், அவை மனிதர்களை அச்சுறுத்தும் வகையில் இருந்தால் அதை சுட்டுக் கொல்ல, சட்டத்தில் வழிவகை இருப்பதாகச் சொல்கிறார்கள்.