புதுடெல்லி: இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொல்லப்பட்டது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கிட்டதட்ட 32 ஆண்டு காலமாக இயக்கத்தை வழிநடத்திய சக்திவாய்ந்த தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லாவின் இழப்பு, ஹிஸ்புல்லாவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்தத் தகவல் அறிந்து, லெபனான் முழுவதும் மக்கள் கதறி அழுதவண்ணம் உள்ளனர்.
கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகு மிகப் பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் கடந்த திங்கள்கிழமை லெபனானின் தெற்குப் பகுதி நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்தது. இதைத் தொடர்ந்து, நாளுக்கு நாள் மோதல் நீடித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
லெபனான் தலைநகரான பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் ஒரு குடியிருப்புக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் நஸ்ரல்லா பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை துல்லியமான வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்திருந்தது. இது குறித்து, இஸ்ரேல் ராணுவம் அதன் எக்ஸ் பக்கத்தில், “சையது ஹசன் நஸ்ரல்லா இனி தீவிரவாதத்தால் உலகை அச்சுறுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டத்தை ஹிஸ்புல்லா உறுதி செய்தது. இதுகுறித்து ஹிஸ்புல்லா இயக்கம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நஸ்ருல்லா தனது சக தியாகிகளுடன் இணைந்து கொண்டார். பாலஸ்தீனத்துக்கு ஆதரவான, எதிரிகளுக்கு எதிரான புனிதப் போர் தொடரும் என ஹிஸ்புல்லாக்கள் உறுதி எடுத்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த ஹசன் நஸ்ரல்லா? – ஹசன் நஸ்ரல்லா 1960-ஆம் ஆண்டு பெய்ரூட்டின் கிழக்கு போர்ஜ் ஹம்மூத் பகுதியில் பிறந்தவர். அங்கு அவரது தந்தை அப்துல் கரீம், ஒரு சிறிய காய்கறி கடை நடத்தி வந்தவர். ஹசனின் இளமைக்காலத்தில் லெபனான் உள்நாட்டு போரில் சிக்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் லெபனானை கைப்பற்றியது. அதன் தொடர்ச்சியாக, இஸ்ரேலை வீழ்த்த ஓர் உறுதியான அமைப்பு தேவை என்று முடிவெடுத்த போராளி குழுக்கள் ஹில்புல்லா இயக்கத்தை உருவாக்கினார்கள். கடந்த 1992-ஆம் ஆண்டு அப்போதைய ஹிஸ்புல்லா தலைவராக இருந்த அப்பாஸ் அல்-முசாவி, இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் ஹசன் நஸ்ரல்லா தலைமையில் ஹிஸ்புல்லா அமைப்பு இயங்க ஆரம்பித்தது.
ஈரானுடன் நெருக்கமான உறவு கொண்ட ஒரு நபராக அறியப்பட்டவர் ஹசன் நஸ்ரல்லா. அதோடு, ஹிஸ்புல்லாவை ஓர் அரசியல் மற்றும் ராணுவ சக்தியாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகித்தவர், குழுவின் ஆதரவாளர்களால் மதிக்கப்பட்டவர். நஸ்ரல்லா தலைமையின்கீழ், பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் மற்றும் ஈராக், ஏமனில் உள்ள போராளிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த கால அனுபவங்களில் இருந்து சர்வதேசச் சூழல் எப்படி மாறுகிறது என்பதை எல்லாம் கண்காணித்து வந்தவர் ஹசன்.
இன்று லெபனான் அரசாங்கத்தை வழிநடத்தும் முக்கிய இடத்தில் ஹிஸ்புல்லா இருக்கிறது. இந்த அமைப்புதான் ஹமாஸை முழுமையான ஆயுதம் தாங்கிய போராளிக் குழுவாக உருவாக்கியது. இவை அனைத்துக்கும் முக்கியப் புள்ளியாக செயல்படுவது ஹசன் நஸ்ரல்லாதான் என்பதை புரிந்துக்கொண்ட இஸ்ரேல், அவரைக் கொல்ல பல ஆண்டுகளாக திட்டம் தீட்டி வந்தது குறிப்பிடத்தக்கது. கிட்டதட்ட 32 ஆண்டு காலமாக ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்தவர் ஹசன்.
தனது மூத்த மகன் ஹாடி (Hadi) இஸ்ரேலிய தாக்குதலில் 2000-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட போதும்கூட தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகளுடனான போரை நஸ்ரல்லா தொடர்ந்து முன்னின்று நடத்தினார். என்ன நடந்தாலும் ‘எல்லா லெபனான் பிரதேசங்களும் மீட்டெடுக்கப்பட வேண்டும்’ என்று கர்ஜித்தவர். மதத் தலைவராகவும் அறியப்பட்டவர்.
யார் அடுத்து? – நஸ்ரல்லாவின் மரணச் செய்தி உறுதி செய்யப்பட்டதால், ஹிஸ்புல்லாவுக்கு அடுத்து யார் தலைமை தாங்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில், தற்போது, ஹஷேம் சஃபிதீன் நஸ்ரல்லாவின் வாரிசாகக் கருதப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் ரியாக்ஷன் என்ன? – இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக, ஈரான் உயர் தலைவரும், இஸ்லாமிய மதகுருவுமான அயதுல்லா அலி கமேனி உச்சபட்ச பாதுகாப்புடன் உள்நாட்டிலேயே பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பட்டுள்ளதாக தெஹ்ரானின் அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள் கூறுகையில், ‘லெபனானின் ஹிஸ்புல்லாக்கள் மற்றும் உள்ளூர் ஆயுதக் குழுக்களுடன் தொடர்ச்சியாக ஈரான் தொடர்பில் இருந்து வந்தது. இந்தநிலையில், தெற்கு லெபனானில் வெள்ளிக்கிழமை நடந்த வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தனர்.
ஹசன் நஸ்ரல்லாவின் பாதை தொடரும் – ஈரான்: இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டாலும் அவரது பாதை தொடரும் என ஈரானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானின் வெளியுறவு அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புரட்சித் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவின் புனிதப் பாதை தொடரும். இறைவன் விரும்பினால் குத்ஸின் (ஜெருசலேம்) விடுதலையில் அவரின் இலக்கு நனவாகும்” என்று தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் இரங்கல்: இதனிடையே, ஹில்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிப்பதாக பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
லெபனான் உயிரிழப்பு நிலவரம் என்ன? – காசா பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் ராணுவம், தற்போது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் நேற்று முன்தினம் நடைபெற்ற தாக்குதலில் 92 பேர் உயிரிழந்தனர், 153 பேர் காயம் அடைந்தனர். ஹிஸ்புல்லா அமைப்பின் ட்ரோன் பிரிவு கமாண்டர் முகமது உசைன் ஸ்ரூர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்ததை ஹிஸ்புல்லா அமைப்பினர் உறுதி செய்துள்ளனர். கடந்த 6 நாட்களாக இஸ்ரேல் நடத்தும் குண்டு வீச்சு தாக்குதலில், லெபனானில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக, அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.