நியூயார்க்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் இடம்பெற்றுள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. இரு ஆண்டுகள் மட்டும் பதவி வகிக்கும் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கு குறைந்த செல்வாக்கு மட்டுமே உள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முழு ஆதரவு அளித்துள்ளார். ரஷ்ய அதிபர் புதினும் ஆதரவு வழங்கி உள்ளார். இந்த சூழலில் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் நேற்று முன்தினம் பேசும்போது, “இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் மற்றும் இரு ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர், ஐ.நா. பொது சபை கூட்டத்தில் நேற்று பேசும்போது, “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும். இந்தியா, பிரேசில், ஜெர்மனி,ஜப்பான் மற்றும் இரு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளஅமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய 4 நாடுகள் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளித்துள்ளன. ஆனால் சீனா மட்டும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சீனாவின் எதிர்ப்பை மீறிஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்இந்தியா நிரந்தர உறுப்பினராகும்வாய்ப்பு அதிகரித்துள்ளது.