பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது லோக் ஆயுக்தா போலீஸார் நில முறைகேடு வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை 3 மாதங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய லோக் ஆயுக்தா முடிவெடுத்துள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியிடம் கையகப்படுத்திய நிலத்துக்கு மாற்றாக மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம், 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. இந்த நிலத்தின் மதிப்பு கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட பன்மடங்கு அதிகமாக இருந்தது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. எனவே ஆளுநர் தாவர்சந்த் கெலாட், சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
இதற்கு எதிராக சித்தராமையா தொடர்ந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ஆளுநர் அளித்த அனுமதியை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்தது. இதையடுத்து சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கைவிசாரிக்குமாறு லோக் ஆயுக்தாவின் மைசூரு பிரிவு அதிகாரிகளுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை 3 மாதங்களுக்குள் முடித்து அறிக்கையை தாக்கல்செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து லோக் ஆயுக்தாவின் மைசூரு பிரிவு போலீஸ்அதிகாரிகள், முதல்வர் சித்தராமையா மீது நேற்று நில முறைகேடு வழக்கை பதிவு செய்தனர். இவ்வழக்கில் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழக அதிகாரிகள், சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உள்ளிட்டோரிடம் 3 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
ராஜினாமா செய்ய மாட்டேன்: பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர், முதல்வர் சித்தராமையா பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி கர்நாடகா முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து சித்தராமையா கூறும்போது, ‘‘வழக்கை நான் சட்டப்படி எதிர்கொள்வேன். காங்கிரஸ் மேலிடமும் எம்எல்ஏக்களும் எனக்கு ஆதரவாக இருப்பதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறேன்” என்று தெரிவித்தார்.