சட்டம் என் கையில் விமர்சனம்: த்ரில்லர் கதையில் முடிச்சுகளைக் கச்சிதமாகப் போட்டால் மட்டும் போதுமா?

ஏற்காடு மலைப்பாதையில் பதற்றமாக காரினை ஓட்டிச்செல்லும் கௌதம் (சதீஷ்) எதிர்பாராமல் மோட்டார் சைக்கிளில் வரும் ஒருவர் மீது மோதிவிடுகிறார். சம்பவ இடத்திலே அவர் உயிரிழக்க, பதற்றத்தில் சடலத்தை தன் கார் டிக்கியில் மறைத்து வைத்து பயணத்தைத் தொடர்கிறார். இந்த நிலையில் போலீஸ் செக் போஸ்டில் வண்டியை நிறுத்தாமல் செல்ல, அடுத்த செக்போஸ்டில் மோசமான அதிகாரியான பாட்ஷாவிடம் (பாவேல் நவகீதன்) மாட்டிக்கொள்கிறார். அகப்பட்டுவிட்டார் என்று நினைக்கும் நேரத்தில் பாட்ஷாவை கௌதம் தாக்க, காருடன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இந்நிலையில், அதே இரவில் மற்றொரு பெண்ணின் சடலமும் கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த வழக்கை அதே காவல்நிலையத்தைச் சேர்ந்த எஸ்.ஐ விநாயகம் (அஜய் ராஜ்) விசாரிக்கிறார். விபத்தில் இறந்தவர் யார், கொல்லப்பட்ட பெண் யார், சதீஷ் இந்த சிக்கலிலிருந்து எப்படி மீள்கிறார் போன்ற கேள்விகளுக்கு விடை காண்பதே இந்தச் ‘சட்டம் என் கையில்’.

சட்டம் என் கையில் விமர்சனம்

தனது வழக்கமான நகைச்சுவை பாணியிலிருந்து விலகி, தீவிரமான பரிமாணத்தில் சதீஷ். ஆபத்திலிருந்து தப்பிக்க முயலும் இடங்களில் பதற்றத்தினைச் சிறப்பாகக் கையாண்டாலும், கோபத்தினைக் கையாளுகின்ற சிக்கலான பகுதிகளில் எமோஷன் மிஸ்ஸிங். மிருகத்தனமாக நடந்து கொள்ளும் அடாவடி காவல்துறை அதிகாரியாக மிரட்டுகிறார் பாவேல் நவகீதன். குறிப்பாக ஒரு பக்கம் கைதி, மறுபக்கம் சக அதிகாரி என இருபக்கமும் தனது ஈகோவினால் சண்டை செய்தாலும், அதிலிருக்கும் மெல்லிய வேறுபாட்டினைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். அவருடன் அதிகார மோதலில் ஈடுபடும் விசாரணை அதிகாரியாக அஜய் ராஜ், ஃபர்பாம் செய்ய வாய்ப்பிருந்தும் அதை முழுமையாகப் பயன்படுத்தவில்லை. சிறியதொரு பாத்திரத்தில் வித்யா பிரதீப் கொடுத்த பணியினைச் செய்திருக்கிறார். காவல்துறை அதிகாரிகளாக மைம் கோபி, ராமதாஸ் மட்டுமே கவனிக்க வைக்கிறார்கள். பவா செல்லத்துரை நடிப்பதற்கு முயற்சி செய்து தோற்கிறார்.

பனிமூடிய இரவுக் காட்சிகள், திரைக்கதையின் அழுத்தத்தை அதிகரிக்கும் காட்சி கோணங்கள் என ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா திரில்லர் சோனை அலங்கரித்திருக்கிறார். ஏற்காட்டின் இரவு தன்மையைக் கச்சிதமாகத் திரையில் ஏற்றியிருக்கிறார். ஆனால் பிளாஷ்பேக் போர்ஷனில் நாடகத்தன்மை எட்டிப்பார்க்கிறது. முதல் பாதியில் ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் அபத்தங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், படத்தின் சூழலுக்கு ஏற்ற வகையில் காட்சிகளைத் தொகுத்துள்ளார் படத்தொகுப்பாளர் மார்ட்டின் டைட்டஸ். இருப்பினும் செயற்கையாக நீளும் இரண்டாம் பாதியின் கோர்வை அயற்சியைத் தருகிறது. அருண் ஏகே, ராஜா நல்லையா கூட்டணி ஒலி வடிவமைப்பில் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.

சட்டம் என் கையில் விமர்சனம்

என்ன வரக் காத்திருக்கிறது என்று கொண்டை ஊசி வளைவுகளைப் போலப் பரபரப்பான திரில்லாராக முதல் 15 நிமிடங்கள் நகர்கின்றன. அதில் கதையின் முக்கிய திருப்புமுனைகள் மற்றும் மர்மங்கள் எதுவும் சொல்லப்படாமல் கதாபாத்திரங்களின் பின்னணிகள் மட்டுமே விவரிக்கப்படுகின்றன. இது பெரிய ஆச்சரியத்தைத் தராவிட்டாலும் ஒரு சலிப்பில்லாத முதல்பாதியைத் தந்துவிடுகின்றன. வாட்டர் கேன் மற்றும் சேரில் குத்தியிருக்கும் ஆணி ஆகியவற்றைப் பயன்படுத்திய விதம் சமயோஜிதம்!

இரண்டாம் பாதி தொடங்கிய சில நிமிடங்களில் மர்மங்களை விளக்கத் தொடங்குகிறது படம். அது சுவாரஸ்யமில்லாத விசாரணை, மீடியாவுக்கு முன்னாள் குற்றவாளியைப் பேச வைக்கும் லாஜிக் ஓட்டைகள் என முன்னர் உருவான அனைத்து எதிர்பார்ப்புகளையும் காலி செய்துவிடுகின்றன. மேலும் இயக்குநர் சாச்சி, ‘திரைக்கதை என் கையில்’ என்பதாகப் பார்வையாளர்களைக் குறைத்து மதிப்பிட்டு எழுதிய க்ளைமாக்ஸ் ‘காதுல பூ’ ரகம்.

சட்டம் என் கையில் விமர்சனம்

மொத்தத்தில் த்ரில்லாருக்காக இறுக்கமான முடிச்சுகளை வலுவாகப் போட்டு, பின்னர் அதை எப்படி அவிழ்ப்பது என்று தெரியாமல் குழம்பி பார்வையாளர்களைக் கைவிடுகிறது இந்த ‘சட்டம் என் கையில்’.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.