சென்னை அம்பத்தூர் ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். கட்டட வேலை செய்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள அங்காளம்மன் கோயிலுக்குச் செல்வது வழக்கம். அப்போது அதே கோயிலுக்கு ஆவடி வெள்ளானூர் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரும் வந்திருக்கிறார். அதனால் ராமகிருஷ்ணனும் விஜய்யும் பழகி வந்திருக்கிறார்கள். தன்னைக் கல்லூரி பேராசிரியர் என ராமகிருஷ்ணனிடம் விஜய் கூறியிருக்கிறார். இந்நிலையில், தன்னுடைய சகோதரியின் மகன் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் சிரமப்படுவதாக விஜய்யிடம் ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

அதைக் கேட்ட விஜய், “கவலைப்படாதீங்க. என்னுடைய நண்பர் ஒருவர் சென்ட்ரலில் உள்ள ரயில்வே தலைமையகத்தில் வேலை செய்து வருகிறார். அவர் சிபாரிசு செய்தால் ரயில்வேயில் டி.டி.ஆர் வேலை கிடைத்துவிடும். ஆனால், அதற்குக் கொஞ்சம் பணம் செலவாகும்” என ராமகிருஷ்ணனிடம் கூறியிருக்கிறார். அதற்கு ராமகிருஷ்ணன், “எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. சென்ட்ரல் கவர்மென்ட் வேலை கிடைத்தால் லைஃப்பில் செட்டிலாகிவிடலாம்” எனப் பதிலளித்திருக்கிறார். இதையடுத்து டி.டி.ஆர் வேலைக்குப் பத்து லட்சம் ரூபாய் வரை செலவாகும் என ராமகிருஷ்ணனிடம் விஜய் கூறியிருக்கிறார். அதற்குச் சம்மதித்த ராமகிருஷ்ணன், பத்து லட்சத்தை விஜய் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
பணத்தை வாங்கிய பிறகு விஜய், ரயில்வேயில் வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்திருக்கிறார். அதனால் ஆவடி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விஜய் மீது ராமகிருஷ்ணன் புகாரளித்தார். அதன்பேரில் ஆவடி மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதலில் விஜய்யைப் படித்த காவல்துறை அவர் அளித்த தகவலின்படி மற்றொரு விஜய், வினோத் ஆகிய இருவரையும் சேர்த்து, மூன்று பேரைக் கைது செய்தனர். இந்த மோசடி வழக்கில் கௌரவ குமார் என்பவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து ஆவடி மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை கூறுகையில், “அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி சிலர் மோசடி வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதை உண்மையென நம்பி யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மோசடி கும்பலிடம் சிலர் ஏமாந்து வருகிறார்கள். கோயிலில் அறிமுகமான விஜய்யை நம்பி ராமகிருஷ்ணனும் ரயில்வே டி.டி.ஆர்., வேலைக்காகப் பத்து லட்சத்தைக் கொடுத்து ஏமாந்துள்ளார். இந்த வழக்கில் கௌரவ குமாரைத் தேடி வருகிறோம். அவர் சிக்கினால்தான் மோசடி கும்பலின் முழு பின்னணி தெரிய வரும்.” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb