அமராவதி: திருப்பதி பெருமாள் கோயிலில் தயாரிக்கப்படும் லட்டு உள்ளிட்ட பிரசாதத்துக்கு திருமலா திருப்பதி தேவஸ்தானமே பொறுப்பு என்றும் அதற்கும் ஆந்திரப் பிரதேச அரசுக்கும் தொடர்பு இருந்ததில்லை என்றும் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, “திருப்பதி கோயிலுக்கு நான் செல்லக் கூடாது என்பதற்கான முயற்சிகளை ஆந்திரப் பிரதேச அரசு எடுத்துள்ளது. இது தொடர்பாக எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோருக்கு ஆந்திர அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு செல்வதாக இருந்தால், அந்த நிகழ்ச்சி அரசின் அனுமதி பெறாதது. எனவே, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் மீது வழக்கு பதியப்படும் என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸை காவல்துறையினர் வழங்கி உள்ளார்கள்.
திருப்பதிக்கு நான் ஒருமுறை அல்ல பலமுறை சென்றிருக்கிறேன். நான் மேற்கொண்ட 3,468 கிலோ மீட்டர் பாத யாத்திரைக்கு முன்பும் பின்பும் திருமலைக்கு நடந்தே சென்றிருக்கிறேன். முதல்வரான பிறகும் திருப்பதிக்கு பலமுறை சென்றிருக்கிறேன்.
முதல்வரானதும் ஒவ்வொரு வருடமும் திருமலா திருப்பதி தேவஸ்தானம் எனக்கு அழைப்பு விடுக்கும். அந்த அழைப்பின் மூலம் ஒவ்வொரு வருடமும் வெங்கடேஸ்வர சுவாமிக்கு வஸ்தரம் வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தற்போது பிரச்சினை திசை திருப்பப்பட்டுள்ளது.
முதல்வர் சந்திரபாபு நாயுடு மிகப் பெரிய தவறிழைத்துள்ளார். திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் நன்மதிப்பை குறைத்துவிட்டார். திருப்பதி லட்டு மீது இருந்த பெருமிதம், சந்திரபாபு நாயுடுவால் அழிக்கப்பட்டுவிட்டது. அவர் வேண்டுமென்றே சந்தேக விதையை விதைத்துள்ளார். திருப்பதி லட்டு உண்பதற்கு ஏற்றது அல்ல என அவர் எண்ண வைத்துவிட்டார். இத்தனைக்கும் அவர் சொல்வது பொய் என்பது அவருக்கே தெரியும்.
திருப்பதி கோயில் லட்டு அல்லது பிரசாதத்துக்கான பொருட்கள் கொள்முதல் செய்வது என்பது புதிதல்ல. மிக நீண்ட காலமாக இது நடக்கிறது. திருமலா திருப்பதி தேவஸ்தானம் மிகப் பெரிய நன்மதிப்பு உள்ள நிறுவனம். அந்த வாரியத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அந்த வாரியத்தில் உறுப்பினராக வேண்டுமானால், மத்திய அமைச்சர் அல்லது மாநில முதலமைச்சர்களின் பரிந்துரை இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களைக் கொண்ட உயர்ந்த அமைப்புதான் திருமலா திருப்பதி தேவஸ்தானம்.
அந்த வாரியத்தில் உள்ளவர்கள் மிக மிக வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றக்கூடியவர்கள். அவர்களின் ஒரே நோக்கம், அவர்கள் என்ன செய்வதாக இருந்தாலும் அது கோயிலுக்கு நல்லதாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான். பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் விடுவது வழக்கமான நடைமுறை. ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை கொள்முதல் செய்வதற்கான இ டெண்டர் விடப்படும். இதில் அரசு தலையிடுவதில்லை. திருமலா திருப்பதி தேவஸ்தானம் சுய அதிகாரம் கொண்ட அமைப்பு. அதுதான் முடிவுகளை எடுக்கும். இ டெண்டரில் குறைந்த விலையை நிர்ணயிப்பவர்களுக்கு டெண்டர் வழங்கப்படும். இவை அனைத்துமே வழக்கமான நடைமுறைதான்.
ஒரே நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்படுவதில்லை. இதில் பல நிறுவனங்கள் ஈடுபடும். என்ஏபிஎல்-ஆல் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையத்தின் சான்றிதழுடன்தான் கோயிலுக்கு நெய் வழங்கப்படும். அதன் பிறகு திருமலா திருப்பதி தேவஸ்தானம் 3 பரிசோதனைகளை மேற்கொள்ளும். 3 சோதனைகளில் ஒரு சோதனை தோல்வி அடைந்தாலும் பொருள் திருப்பி அனுப்பப்படும். கலப்பட நெய்யை ஏற்றிக்கொண்டு வரும் டேங்கர் லாரிகள், கோயிலுக்கு உள்ளேயே செல்ல முடியாது. அப்படி இருக்கும்போது எப்படி அது பயன்படுத்தப்பட்டிருக்க முடியும். இந்த நடைமுறைதான் பல ஆண்டுகாலமாக இருந்து வருகிறது.
2014-19-ல் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது 14-15 முறை டேங்கர் லாரிகள் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. 2019-2024-ல் நான் முதல்வராக இருந்த காலகட்டத்திலும் 18 முறை டேங்கர்கள் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.