பெய்ரூட்: பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழித்தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
லெபனான் தலைநகரான பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் ஒரு குடியிருப்புக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் நஸ்ரல்லா பதுங்கியிருப்பதாக வந்தத் தகவலை அடுத்து அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று (வெள்ளிக்கிழமை) துல்லியமான வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் அதன் எக்ஸ் பக்கத்தில், “சையது ஹசன் நஸ்ரல்லா இனி தீவிரவாதத்தால் உலகை அச்சுறுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளது.
நஸ்ரல்லாவின் மரணத்தை அறிவித்த இஸ்ரேஸ் பாதுகாப்புப் படையின் தலைமை அதிகாரி லெப்.ஜெனரல், ஹெர்சி ஹாலேவி, “இஸ்ரேல் மற்றும் அதன் குடிமக்களை அச்சுறுத்தும் யாரையும் நாங்கள் சென்றடைவோம். இது முடிவு அல்ல. இஸ்ரேல் மக்களை அச்சுறுத்தும் யாருக்கும் இது ஒரு எளிமையான செய்தி. அவர்களை எப்படி அடைவது என்று எங்களுக்குத் தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இஸ்ரேல் தாக்குதல் நடத்தப்பட்ட சில மணி நேரத்துக்குப் பின்னர் ஹிஸ்புல்லா ஊடகப் பிரிவு செய்தித் தொடர்பாளர் ஹஜ் முகமது அஃபீஃப், “நஸ்ரல்லாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நஸ்ரல்லா இருப்பதாக நினைத்து இஸ்ரேல் குறிவைத்த இலக்கில் அவர் அப்போது இல்லை. ஆனால், அதன்பின்னர் அவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை” எனத் தெரிவித்திருந்தார். இந்தத் தாக்குதலில் நஸ்ரல்லாவின் மகள் சைனப் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.
இந்தத் தாக்குதலுக்கு சில மணி நேரத்துக்கு முன்னர் ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஹிஸ்புல்லாக்கள் போர்ப் பாதையை தேர்வு செய்யும் வரை இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை. எங்கள் நாட்டின் மீதான அச்சுறுத்தலை விலக்க எங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது.” என்று பேசியிருந்தார்.
ஹிஸ்புல்லா கமாண்டர் நஸ்ரல்லாவைக் குறிவைத்து நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியதில் பலனடையாத இஸ்ரேல் இன்று சனிக்கிழமை காலை தொடங்கியே லெபனானில் 20-க்கும் மேற்பட்ட முறை வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான், ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் வாசிக்க >> ஹிஸ்புல்லா தலைவரை குறிவைத்து பெய்ரூட்டை புரட்டிப்போட்ட இஸ்ரேல்: நடந்தது என்ன?