திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் மகா பிரசாதம் லட்டு தயாரிப்பதற்கு அனுப்பப்பட்ட நெய்யில், விலங்கு கொழுப்புகள் கலந்திருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தேசிய அளவில் பூதாகாரமாகியிருக்கும் நிலையில், பல்வேறு தரப்பினரும் திருப்பதி கோயிலுக்கு கலப்பட நெய் சப்ளை செய்த நிறுவனம் மீதும் அதன் உரிமையாளர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தும் விதமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஜீயர், ஸ்ரீ மணவாள மாமுனிகள் சடகோபராமானுஜர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “திருமலை திருப்பதியில் லட்டு தயாரிப்பதற்காக அனுப்பப்பட்ட நெய்யில், மாட்டு கொழுப்பு மற்றும் விலங்கு கொழுப்புகள் கலப்படம் செய்திருப்பது செய்திகளில் வெளியானதுடன் ஆய்வின் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது திருமலை திருப்பதி பக்தர்களுக்கு மிகப்பெரிய வருத்தமளிக்கக்கூடியது. கலப்பட நெய், அனுப்பிய ஒப்பந்தக்காரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும். மேலும் மதம் தொடர்பான பிரச்னைகளை எழுப்பும் விஷமிகளை தண்டிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும்” என ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் சடகோபராமானுஜர் ஜீயர் கூறினார்.