India National Cricket Team: இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி (India vs Bangladesh 2nd Test) நேற்று (செப். 27) உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா வங்கதேச அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். மழை காரணமாக போட்டி நேற்று தாமதமாக தொடங்கியது. சுமார் 35 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் வங்கதேசம் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை எடுத்திருந்தது.
அதன்பின்னர் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்படியே மழையும் குறுக்கிட முதல் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று தொடர் மழை காரணமாக மைதானம் ஈரப்பதமாகவே காணப்பட்டது. மழை தொடர்ந்து பெய்து வந்ததால் இரண்டாம் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுவதுமாக கைவிடப்பட்டது. இதனால் ஆட்டம் டிராவாகும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது.
கான்பூர் டெஸ்ட்: 3வது நாளில் மழை வருமா?
மூன்றாம் நாளான நாளை ஆட்டம் தொடங்கும் காலை 9.30 மணியளவில் மழை பெய்ய 61% வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் மதியம் 12.30 மணியளவில் மழைக்கான வாய்ப்பு 24% வரை வீழ்ச்சி அடையும் என்றும் மேகமூட்டமாக காணப்படும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், மதியம் 2.30 மணியளவில் மீண்டும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், இன்று நடந்தது போல் மொத்தமாக ஆட்டம் தடைபடாது என்றும் முதல் நாள் போல் ஆட்டம் ஓரளவுக்கு நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தொடரில் இந்திய அணி (Team India) 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றாலும் இந்த போட்டி ஒருவேளை டிராவில் முடிந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெறும் வாய்ப்பு கடினமாகிவிடும் என கூறப்படுகிறது. அந்த வகையில், ஒருவேளை இந்த போட்டி டிராவில் முடிந்தால் இந்திய அணி WTC இறுதிப்போட்டிக்கு தகுதிபெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இதில் காணலாம்.
WTC இறுதிப்போட்டி: இந்தியாவுக்கான வாய்ப்பு?
WTC 2023-25 புள்ளிப்பட்டியலில் 71.67 சதவீத புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும் கூட இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு இன்னும் உறுதியாகவில்லை. வங்கதேசத்திற்கு (Team Bangladesh) எதிரான இந்த 2ஆவது போட்டி டிராவில் முடியும்பட்சத்தில், இந்தியா அடுத்த நடைபெறும் 8 டெஸ்ட்களில் 5இல் வெற்றி பெற வேண்டும். நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுவிட்டால் ஆஸ்திரேலியாவில் சிரமப்பட தேவை இல்லை. இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்த முடியாது என்றாலும், நியூசிலாந்தை 3-0 என்ற கணக்கில் வீழ்த்துவது இந்தியாவுக்கு பெரிய சவாலாக இருக்கும்.
அதேபோல் நியூசிலாந்தை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுவிட்டாலும் கூட பார்ட்ர் – கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும். அப்படி வென்றால் மட்டுமே WTC 2025 இறுதிப்போட்டிக்கு தகுதிபெற இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைக்கும். 8 போட்டிகளில் 5இல் வெற்றி பெற வேண்டும் என்பது, அதுவும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக என்பது சற்று சிரமமான விஷயம் எனலாம். ஒருவேளை இந்த வங்கதேசத்திற்கு எதிரான 2வது போட்டியில் இந்தியா வென்றுவிட்டால் அடுத்த 8 போட்டிகளில் 3இல் வென்றாலே இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு கிடைக்கும் எனலாம்.