சென்னை: வங்கியில் முறைகேடாக கடன் பெற்றதாக அதிமுக முன்னாள் எம்பிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014-19 காலகட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.பியாக பதவி வகித்தவர் கே.என்.ராமச்சந்திரன். இவர் தனியார் அறக்கட்டளை நிர்வாகியாகவும் உள்ளார். இந்த அறக்கட்டளையின் கீழ் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரியின் விரிவாக்கத்துக்காக சென்ட்ரல் வங்கியில் கடன் கோரி விண்ணப்பித்துள்ளார்.
இந்த விண்ணப்பத்தை பரிசீலிக்க அப்போது வங்கி மேலாளராக பணியாற்றிய தியாகராஜன், தானும் தனது குடும்பத்தாரும் அமெரிக்கா சென்று வர விமான கட்டணமாக ரூ.2.69 லட்சத்தை பெற்றுக்கொண்டு ரூ.20 கோடியை கடனாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வங்கி மேலாளர் தியாகராஜன், முன்னாள் எம்.பி கே.என்.ராமச்சந்திரன், அவரது மகன் ராஜசேகரன் ஆகியோர் மீது சிபிஐ கடந்த 2015-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான சிறப்பு நீதிமன்றம் அதிமுக முன்னாள் எம்,பியான கே.என்.ராமச்சந்திரன், அவரது மகன் ராஜசேகரன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 1.10 கோடி அபராதமும் விதித்தது. வங்கி மேலாளரான தியாகராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 13.10 லட்சம் அபராதம் விதித்து கடந்த 2020-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் சபானா ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கே.என்.ராமச்சந்திரன் உள்ளிட்ட மூவருக்கும் சிறப்பு நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.