புதுடெல்லி: ஹரியானாவில் உள்ள 90 இடங்களுக்கு வரும் அக்டோபர் மாதம் 5-ம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்நிலையில் அங்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இறுதிக் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த 13 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் 13 பேரையும் 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்கி காங்கிரஸ் கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஹரியானா மாநில காங்கிரஸ் கமிட்டி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக காங்கிரஸ் பிரமுகர்கள் நரேஷ் தாண்டே, பிரதீப் கில், சஜ்ஜன் சிங் துள், சுனிதா பட்டன், ராஜீவ் மாமுராம் கோண்டர், தயாள் சிங் சிரோஹி, விஜய் ஜெயின் தில்பாக் சன்டில், அஜித் போகத், அபிஜித் சிங், சத்பிரர் ரட்டேரா, நீத்து மான், அனிதா துள் பாட்சிக்ரி ஆகிய 13 பேர் கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளனர். இவர்களது நீக்கம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.