சண்டிகர்: ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 300 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 2,000, சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது.
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று (செப். 28) வெளியிடப்பட்டது. ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அஷோக் கெலாட் உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகள்: ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 25 லட்சம் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சைப் பெற்றுக்கொள்ளும் வகையில் காப்பீடு வழங்கப்படும். பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 2,000 வழங்கப்படும்.
போதையில்லா ஹரியானா உருவாக்கப்படும். ரூ. 500-க்கு காஸ் சிலிண்டர் வழங்கப்படும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதப்படுத்தப்படும். உடனடி பயிர் காப்பீடு வழங்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு ரூ. 3.5 லட்சம் செலவில் 2 அறை கொண்ட வீடு கட்டித்தரப்படும். முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ. 6,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். க்ரீமி லேயரின் வருமான உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.
இளைஞர்களுக்கு 2 லட்சம் நிரந்தர வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும். சீக்கிய மதகுரு குருகோவிந்த் சிங் பெயரில் குருக்ஷேத்தரத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். பஞ்சாபி மொழிக்கு உரிய மரியாதை வழங்கப்படும். மேவாட் நகரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும். ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கடந்த 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 40 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளில் வெற்றி பெற்றது.