Bravo: "இது உங்களுக்கு கசப்பான தருணம்தான்; ஆனாலும்…!" – சிஎஸ்கே ரசிகர்களுக்கு பிராவோ நன்றி

சிஎஸ்கே அணியிலிருந்து விலகி இருக்கும் பிராவோ, சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராகப் பொறுப்பேற்றிருக்கிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்தது குறித்துப் பேசிய பிராவோ, “நான் நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் அந்த அணியை எதிர்த்தும் பல்வேறு தொடர்களில் விளையாடி உள்ளேன். நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாகம் என்னைச் சிறப்பாகக் கையாண்டார்கள்.

பிராவோ

எனவே இம்முறை நான் அந்த அணியின் நிர்வாகத்திற்காகப் புதிய பரிமாணத்தை எடுக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது அந்த அணியின் ஆலோசகராகச் செயல்பட இருக்கிறேன். எதிர்வரும் இளம் தலைமுறைக்கு என்னுடைய அனுபவத்தைப் பகிரத் தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருந்தார். சிஎஸ்கே அணியிலிருந்து விலகி பிராவோ, நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் சிஎஸ்கே அணியிலிருந்து விலகி இருக்கும் பிராவோ, சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். வணக்கம் என்று தமிழில் பேசத் தொடங்கிய பிராவோ, “ரகசியம் ஒன்றுமில்லை. இந்த செய்தி சமூக வலைத்தளங்களும் வெளியாகி விட்டது. நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராகச் செயல்படும் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டேன். புதிதாக ஒரு விஷயத்தைச் செய்யத் துவங்கும் எனக்கு ஆசீர்வாதங்களை வழங்கிய சி.எஸ்.கே நிர்வாகக் குழுவிற்கு இந்த தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

குறிப்பாகச் சென்னையில் உள்ள எனது ரசிகர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து சிஎஸ்கே ரசிகர்களுக்கும் நன்றி. நீங்கள் எப்போதும் போல உங்கள் ஆசியையும் ஆதரவையும் எனக்குத் தர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இது உங்களுக்கு ஒரு கசப்பான தருணம் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் எல்லாவற்றிலும் என்னைத் தொடர்ந்து ஆதரிக்கும்படி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்.” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

சென்னை அணிக்காகப் பல ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கி, தன் பேட்டிங் மற்றும் பவுலிங்கால் பல வெற்றிகளைப் பெற்றுத் தந்திருக்கிறார் பிராவோ.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.