சென்ற மாதம் இந்நேரம், மலையாளத் திரையுலகில் நடந்த பாலியல் தொல்லைகள் குறித்த ஹேமா கமிட்டி ரிப்போர்ட் வெளியானதையடுத்து, மலையாள திரையுலகமே மிகுந்த பதற்றத்தில் இருந்தது. சில வருடங்களுக்கு முன்னால், ‘மீ டூ ஹேஷ்டேகின் கீழ், தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகளையும் அச்சுறுத்தல்களையும் பகிர்ந்த நடிகைகள் பலர், மறுபடியும் அதைப்பற்றி பேச ஆரம்பித்தார்கள். அவர்களுடன் இன்னும் சில இளம் நடிகைகளும் தாங்கள் சந்தித்ததை பொதுவெளியில் பகிர்ந்துகொண்டார்கள்.
திரையுலகில் தொடர்ந்து 40 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகின்ற நடிகை ராதிகாவும், தான் கண்ட சில பாலியல் அத்துமீறல் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள, தென்னிந்திய திரைத்துறையே பதற்றக்குள்ளானது. ஆனால், அடுத்த சில வாரங்களில், அடுத்தடுத்த பரபரப்பான செய்திகளின் இடையே ஹேமா கமிட்டி குறித்த தகவல்கள் குறைய ஆரம்பித்தன. ஹேமா கமிட்டியின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டனவா என்று, நடிகையும் வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான ரஞ்சனி அவர்களிடம் கேட்டோம்.
”ஹேமா கமிட்டியில் கொடுக்கப்பட்ட புகார்களின் மீது விசாரணை நடந்துகொண்டு இருக்கிறது. பாதிக்கப்பட்டதாக ஹேமா கமிட்டியில் தெரிவித்தவர்களில், யார் யாரெல்லாம் வழக்குத் தொடுக்கப் போகிறார்கள் என்பது இனிமேல்தான் தெரிய வரும். கூடவே, ஹேமா கமிட்டி பரிந்துரை செய்த ‘சிறப்பு நீதிமன்றம்’ குறித்த அடுத்தக்கட்ட முயற்சிகளையும் நான் செய்து வருகிறேன்” என்றவர், நம்மிடம் மனம் திறந்து பல விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார்.
”ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டதோ 2018-ல். 2019 இறுதியிலேயே ஹேமா கமிட்டி ரிப்போர்ட் அரசிடம் வழங்கப்பட்டு விட்டது. 2022-ல் கேரள சட்ட அமைச்சருடன், WCC அமைப்பைச் சேர்ந்த நாங்கள் பேசியபோது, ஹேமா கமிட்டி ரிப்போர்ட் வெளியிடுவது தொடர்பாக நான் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தேன். ‘அந்த ரிப்போர்ட்டை வெளியிடுவதற்கு முன்னால், சம்பந்தப்பட்ட பெண்களிடம் அதை காட்டி, அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா என்பதை தெரிந்து, அதை மாற்றிய பிறகுதான் வெளியிட வேண்டு’மென்று கூறினேன். ஆனால், அப்படி நடக்கவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஹேமா கமிட்டியின் அறிக்கையை சில மீடியாக்கள் பெற்றுவிட்டதால், ஹேமா கமிட்டி அறிக்கையை கேரள அரசு திடீரென வெளியிட்டு விட்டது.
வெளியிட்டதை தவறு என்று நான் சொல்லவில்லை. அதற்கு முன்பு என்னைப்போல அந்த கமிட்டியிடம் ஸ்டேட்மென்ட் கொடுத்தவர்களிடம் ரிப்போர்ட்டை காட்டியிருக்க வேண்டும்; ரிப்போர்ட்டை வெளியிடப்போகிறோம் என்ற தகவலை தெரிவித்திருக்க வேண்டும். இவை இரண்டையுமே அவர்கள் செய்யவில்லை. ஹேமா கமிட்டி ரிப்போர்ட்டை இந்த முறையில் கையாண்டு இருக்கக்கூடாது என்பதே என் வருத்தம். ரிப்போர்ட் வெளிவந்தவுடன், ஹேமா கமிட்டியிடம் பேசாதவர்கள் எல்லாம் தொலைக்காட்சிகளில், ‘அவங்க என்னை அட்ஜெஸ்ட்மென்ட் கேட்டாங்க; இவங்க என்னை அட்ஜெஸ்ட்மென்ட் கேட்டாங்க’ என்று சொல்லி, விஷயத்தை பூதாகரமாக்கி விட்டார்கள்.
அந்த ரிப்போர்ட்டில், நீதிபதி ஹேமா சில பரிந்துரைகளை செய்திருக்கிறார். அதில் முதல் பரிந்துரையே சிறப்பு நீதிமன்றம் அமைத்து இந்த குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டும் என்பதே. அப்போதுதான் கமிட்டியில் பேசியவர்களின் மாண்பு கெடாது என்கிறது ஹேமா கமிட்டி. ஆனால், அது நடக்கவில்லை. இதையடுத்துதான், ஹேமா கமிட்டியில் அறிவுறுத்தியபடி செய்யுங்கள் என்று நான் நீதிமன்றத்தை நாடினேன்” என்கிறார் ரஞ்சனி.
”பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்கள், வழக்கமான நீதிமன்றத்தை அணுகினால் செய்தி வெளியாகிடும். இதுவே, ஹேமா கமிட்டி பரிந்துரை செய்ததுபோல சிறப்பு நீதிமன்றம் அமைத்தால், பாதுகாப்பாக உணர்வோம். ஆனால், அதை அரசு இன்னும் செய்யவில்லை. அதை துரிதமாக செய்யுங்கள் என்று, நான் தனியாக போராடிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய முயற்சிக்கு சில நடிகைகள் சப்போர்ட் செய்கிறார்கள். ஆனால், அடுத்து நடிக்க வாய்ப்பு கிடைக்காதே என்ற பயத்தினால் அதை மறைமுகமாக செய்கிறார்கள். ஏன்டா வம்பு என்றும் சிலர் இருக்கிறார்கள்.
திரைத்துறையிலும் ஐசிசி கமிட்டி அமைப்பது ஓகே தான். ஆனால், அதே துறையில் இருப்பவர்கள்தானே அந்த கமிட்டியிலும் இருக்கப் போகிறார்கள். அவர்களிடம் எந்தப் பெண்ணாவது புகார் தெரிவித்தால், கமிட்டியில் இருப்பவர்களே, ‘இவங்க உன்மேல புகார் சொல்ல வந்திருக்காங்க’ என்று சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லி விடுவார்கள். அதன்பிறகு, புகார் சொன்ன பெண்ணுக்கு அடுத்த சினிமா வாய்ப்பு கிடைக்காது. இதுதான் நடக்கப்போகிறது.
இப்போது ஓடிடி, அடுத்து வெர்ச்சுவல் சினிமா என்று இந்தத் துறை இன்னும் இன்னும் வளர்ந்துகொண்டே தான் இருக்கும். இன்னும் நிறைய பெண்கள் இந்த சினிமா துறைக்குள் வருவார்கள். இப்போதே இந்தப் பிரச்னையை சட்டப்படி ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தால்தான், அந்தப் பெண்கள் எல்லோரும் பாதுகாப்பாக நடிக்க முடியும். அதற்காகத்தான், நான் ஹேமா கமிட்டி பரிந்துரை செய்ததுபோல சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டி வழக்குத் தொடுத்திருக்கிறேன். விசாரணை அக்டோபர் 3-ம் நடக்கவிருக்கிறது. நல்ல முடிவு கிடைக்கட்டும். அடுத்து, தமிழ்நாட்டுக்கு வருகிறேன். அங்கிருக்கும் திரைத்துறைப் பெண்களுக்காகவும் பேசப்போகிறேன். வெயிட் அண்ட் சீ” என்று சிரிக்கிறார் ரஞ்சனி.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs