பெய்ரூட்: இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா (64) உயிரிழந்தார். பாலஸ்தீனத்தின் காசா பகுதி மக்களுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக இரு தரப்புக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து உள்ளது. இந்த சூழலில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பை ஒழிக்க கடந்த 23-ம் தேதி “நார்த்தன் அரோஸ்” என்ற ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது.
இதன்படி லெபனான் முழுவதும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் 2,000-க்கும் மேற்பட்ட முகாம்களை குறிவைத்து போர் விமானங்கள், ட்ரோன்கள் மூலம் பலமுனை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. லெபனானை குறிவைத்து 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லெபனானின் பல்வேறு பகுதிகளில் சுமார் 8 மீட்டர் முதல் 80 மீட்டர் வரையிலான ஆழத்தில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பல கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதைகளை அமைத்துள்ளனர். தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் தலைமை அலுவலகத்துக்கு அடியில் பிரம்மாண்ட சுரங்க வீடு இருக்கிறது. அந்த சுரங்க வீட்டில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து இஸ்ரேல் விமானப் படையின் போர் விமானங்கள், பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் சுரங்கப் பாதைகள், சுரங்க வீடுகளை அழிக்கும் திறன் கொண்ட அதிநவீன குண்டுகளை கடந்த 27-ம் தேதி இரவுவீசியது. சுமார் 6 அடுக்குமாடி கட்டிடங்களை குறிவைத்து 80 டன் எடை கொண்டகுண்டுகள் வீசப்பட்டன. இதில் 6 கட்டிடங்களும் தரைமட்டமாகின. பூமிக்கு அடியில்பல மீட்டர் ஆழத்துக்கு குண்டுகள் துளைத்துச் சென்றன. இஸ்ரேல் விமானப் படையின் இந்ததாக்குதலில் சுரங்க வீட்டில் பதுங்கியிருந்த ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். அவரோடு தங்கியிருந்த அவரது மகள் ஜைனபும் உயிரிழந்தார். இருவரின் உயிரிழப்பை இஸ்ரேல் ராணுவமும் ஹிஸ்புல்லா அமைப்பும் உறுதி செய்துள்ளன.
ரகசிய இடத்தில் ஈரான் மதத் தலைவர்: ஹிஸ்புல்லா தலைவர் ஹசனின் மறைவை அடுத்து ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தலைமையில் தெஹ்ரானில் நேற்று உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஈரான் அதிபர் மசூத், மூத்த தளபதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் காமெனி பேசும்போது, “லெபனான், ஹிஸ்புல்லாவுக்காக உலகம் முழுவதும் வாழும் அனைத்து முஸ்லிம்களும் ஓரணியில் திரள வேண்டும். இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார். காமெனியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.