புதுடெல்லி: பண்டிகை காலத்தில் உள்நாட்டு தயாரிப்புகளை மட்டுமே வாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி வாயிலாக மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதன்படி 114-வது மனதின்குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் அவர் பேசியதாவது: கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி மனதின் குரல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தற்போது 10 வயதாகி விட்டது. இந்த நிகழ்ச்சியை ஓர் இயக்கமாக மாற்றிய மக்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி.
உத்தர பிரதேசத்தின் ஜான்சி புந்தேல்கண்டில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை இருந்தது. அந்த பகுதியை சேர்ந்த சில பெண்கள், குராரி நதிக்கு புத்துயிரூட்டினர். இதனால் புந்தேல்கண்டில் தண்ணீர் பிரச்சினை தீர்ந்து மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மத்திய பிரதேசத்தின் ராய்புரா கிராமத்தை சேர்ந்த பெண்கள் பெரிய குளத்தை வெட்டினர். இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீரின் மட்டம் கணிசமாக உயர்ந்தது. சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்கள் குளத்தில் மீன்களை வளர்த்து வருவாயை பெருக்கி உள்ளனர்.
இதேபோல மத்திய பிரதேசத்தின் சத்தர்பூரை சேர்ந்த பெண்கள் அங்குள்ள பெரிய குளத்தை தூர்வாரினர். இதன்பிறகு குளத்தில்நீர் நிறைந்தது. தூர்வாரியபோது குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட வண்டலை வளமற்ற நிலத்தில் கொட்டி பழ மரங்களை நட்டனர்.இதன்மூலம் அப்பகுதி பெண்களுக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது. நாட்டு மக்கள் அனைவரும் மழைக்காலத்தில் தண்ணீரை சேமிக்க வேண்டும்.
மாஹே ரம்யா: உத்தராகண்டின் உத்தரகாசி அருகேயுள்ள ஜாலா கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் தினமும் 2 மணி நேரம் கிராமத்தில் தூய்மை பணியை மேற்கொள்கின்றனர். அந்த கிராமம் தற்போது தூய்மைக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.
புதுச்சேரியின் கடற்கரைப் பகுதியிலும் துய்மைப் பணி மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. ரம்யா என்பவர் மாஹே பகுதியை சேர்ந்த இளைஞர்களின் குழுவை வழிநடத்தி வருகிறார். இந்தக் குழுவை சேர்ந்தவர்கள், மாஹேபகுதி கடற்கரைப் பகுதிகளில் தூய்மைப் பணியை மேற்கொள்கின்றனர்.
வரும் அக்டோபர் 2-ம் தேதியன்று தூய்மை பாரத் திட்டம் பத்தாண்டை நிறைவு செய்கிறது. இந்த திட்டத்தை வெற்றி பெறச்செய்த அனைவரையும் பாராட்டுகிறேன். எனது அமெரிக்க பயணத்தின்போது அந்த நாட்டு அரசு 300 தொன்மையான கலை படைப்புகளை திருப்பி அளித்தது. இவற்றில் பல கலை படைப்புகள் 4,000 ஆண்டுகள் பழமையானவை. நமது மரபின்மீது நாம் பெருமிதம் கொள்ளத் தொடங்கும்போது உலகமும் அதனை மதிக்கும். இதன் விளைவாகவே பல்வேறு நாடுகள் நமது நாட்டின் கலை படைப்புக்களை திருப்பி அளித்து வருகின்றன. இது பண்டிகை காலமாகும். இந்த காலத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். இந்திய தொழிலாளி-கைவினைஞரின் வியர்வைக்கு மதிப்பளிக்க வேண் டுகிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.