ஐபிஎல் 2025 மெகா ஏலம்! புதிய விதிகள் எப்படி செயல்படும்? முழு விவரம்!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஐபிஎல் 2025 மெகா ஏலம் மற்றும் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்பதற்கான விதிகளை செப்டம்பர் 28 சனிக்கிழமையன்று வெளியிட்டது. இந்த அறிவிப்பிற்காக ஐபிஎல் அணிகள் தொடங்கி, வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தனர். இந்த புதிய அறிவிப்பில் எத்தனை வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்பதில் தொடங்கி பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. மேலும் ஒவ்வொரு அணியின் பர்ஸ் மதிப்பு மற்றும் வீரர்களுக்கான புதிய போட்டி கட்டணங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதே போல வெளிநாட்டு வீரர்கள் மினி ஏலத்தில் கலந்து கொண்டு அதிக வருமானம் பெறுகிறார்கள் என்ற பேச்சு எழுந்தது. அதற்கும் ஐபிஎல் நிர்வாகம் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கு பெறாத வீரர்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஏலத்தில் கலந்து கொள்ள முடியாது எனவும், ஏலத்தில் பெயரை கொடுத்துவிட்டு கடைசி நேரத்தில் வராமல் இருக்கும் வீரர்களும் இது பொருந்தும் எனவும் பிசிசிஐ எச்சரித்துள்ளது. அதிகம் எதிர்பார்த்த கேப் செய்யப்படாத வீரர்கள் விதியும் மீண்டும் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் 5 ஆண்டுகள் தேசிய அணியில் இடம் பெறாத வீரர்களை கேப் செய்யப்படாத வீரராக கருதி தக்க வைத்து கொள்ள முடியும். ஒவ்வொரு அணியும் மொத்தமாக 6 வீரர்களை தங்கள் அணியில் தக்க வைத்து கொள்ளலாம். ஆனால் நான்காவது மற்றும் ஐந்தாவது வீரரை தக்க வைத்தால் அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். 

ஐபிஎல் 2025 புதிய விதிமுறைகள்:

ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் தற்போது இருக்கும் அணியில் இருந்து அதிகபட்சம் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். இதில் வீரர்களை தக்கவைத்தல் மூலமாகவோ அல்லது ரைட் டு மேட்ச் (RTM) மூலமாகவோ செய்து கொள்ளலாம்.

எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் மற்றும் RTM மூலம் தேர்ந்தெடுப்பது ஐபிஎல் உரிமையாளர்களின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 6 தக்கவைப்புகள் அல்லது RTM பயன்படுத்தி 5 கேப்டு பிளேயர்கள் (இந்திய & வெளிநாடுகள்) மற்றும் அதிகபட்சமாக 2 கேப் செய்யப்படாத வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஐபிஎல் 2025 ஏலத்தில் ஒவ்வொரு அணிக்குமான ஏல பர்ஸ் ரூ. 120 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பள வரம்பு முதல் போட்டி கட்டணம் வரை அனைத்தும் அடங்கும். ஐபிஎல் 2024ல் மொத்த சம்பள வரம்பு ரூ. 110 கோடி ஆகும். அது 2025ல் ரூ. 146 கோடி, 2026ல் ரூ. 151 கோடி மற்றும் 2027ல் ரூ. 157 கோடியாக உயர்ந்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக போட்டி கட்டணம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிளேயிங் 11ல் இடம் பெரும் ஒவ்வொரு வீரருக்கும் இம்பாக்ட் பிளேயர் உட்பட ஒரு போட்டிக்கு ரூ. 7.5 லட்சம் போட்டிக் கட்டணமாக கொடுக்கப்படும். இது இளம் வீரர்களுக்கு அதிகம் உதவும்.

ஒவ்வொரு வெளிநாட்டு வீரர்களும் மெகா ஏலத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் தங்கள் பெயரை பதிவு செய்யவில்லை என்றால், அடுத்த ஆண்டு மினி ஏலத்தில் பதிவு செய்ய முடியாது. மேலும் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, விளையாடாமல் விலகினால் 2 சீசன்களுக்கு பங்கேற்க தடை விதிக்கப்படும்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஐந்து ஆண்டுகள் விளையாடாமல் இருக்கும் இந்திய வீரர்கள் அன் கேப்டு வீரராக கருதப்படுவார். இதன் மூலம் அவரை குறைந்த விலையில் தக்க வைத்து கொள்ள முடியும். அதே போல இம்பாக்ட் பிளேயர் விதி 2027 வரை அமலில் இருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.