அகமதாபாத்: குஜராத்தில் குறிப்பாக அகமதாபாத் மாநகரில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கர்பா நடன நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சிகள் வரும் அக்டோபர் 3-ம் தேதி தொடங்க உள்ளன. இதுகுறித்து அகமதாபாத் மாநகர காவல் ஆணையர் ஜி.எஸ்.மாலிக் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நவராத்திரியை முன்னிட்டு கர்பா நடன நிகழச்சிகளை நடத்த விரும்புவோர், மாகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சிறப்புப் பிரிவில் அனுமதி பெற வேண்டும். உள்ளூர் காவல் நிலையங்களில் அனுமதி பெற முடியாது. நிகழ்ச்சியின் நுழைவாயிலில் டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர்கள், கையடக்க மெட்டல் டிடெக்டர்களை பொருத்த வேண்டும்.
மது அருந்தி வருபவர்களை அனுமதிக்கக் கூடாது. இதுகுறித்து காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். நுழைவு வாயிலில் ஆண் மற்றும் பெண் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும். மேலும் கர்பா நடன நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் அநாகரிகமான உடைகளை அணிந்து வரக்கூடாது. அநாகரிகமான உடை அணிந்து வந்துள்ளார்களா, மது அருந்தி வந்துள்ளார்களா என்பதை கண்காணிக்க தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் எவையெல்லாம் அநாகரிக உடைகள் என்பதை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.