கான்பூர் டெஸ்ட்: இனி மழை பெய்யாது… வெற்றிக்கு இந்திய அணி என்ன செய்ய வேண்டும்? – அதிசயம் நடக்குமா?

IND vs BAN, Kanpur Test: இந்தியா – வங்கதேசம் அணிகள் (India vs Bangladesh) இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளன. தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் கடந்த செப். 19ஆம் தேதி தொடங்கிய நிலையில், 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த செப். 27ஆம் தேதி உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி சுமார் 9 ஆண்டுகளுக்கு பின் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி (Team India) தனது பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யாத நிலையில், வங்கதேசம் அணி இரண்டு மாற்றங்களை செய்தன. இந்தியா 3 பாஸ்ட் பௌலர்கள் – 2 ஸ்பின்னர்கள் என்ற வியூகத்திலும், வங்கதேசம் 2 பாஸ்ட் பௌலர்கள் – 3 ஸ்பின்னர்கள் என்ற வியூகத்திலும் களமிறங்கின. 

முதல் நாளிலேயே ஆட்டம் மழையால் முதலில் தடைப்பட்டது. ஒருமணி நேரம் தாமதமாகவே ஆட்டம் தொடங்கியது. அதேபோல் அன்றும் முழுமையாக ஆட்டம் நடைபெறவில்லை. போதுமான வெளிச்சம் இல்லை என்ற காரணத்தாலும், தொடர் மழை காரணமாகவும் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. அன்றைய தினம் இந்தியா 35 ஓவர்களை மட்டுமே வீசியிருந்தது. வங்கதேசம் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்களை எடுத்திருக்கிறது. மாமினுல் ஹக் 40 ரன்களுடனும், முஷ்பிகுர் ரஹீம் 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆப்பு

நேற்றும், இன்றும் ஒரு பந்து கூட வீசப்படாமல் இரண்டு நாள் ஆட்டங்களும் முழுவதுமாக ரத்தாகின. இன்னும் மீதம் உள்ள இரண்டு நாள்களில் போட்டி டிராவை நோக்கிச் செல்லவே 99 சதவீதம் வாய்ப்புள்ளது. அதிசயம் நடந்தால் மட்டுமே போட்டியில் வெற்றி – தோல்வி என்ற முடிவு கிடைக்கும் எனலாம். போட்டி டிராவில் முடிந்தால் இந்தியாவுக்குதான் பிரச்னை. இந்த போட்டியை இந்தியா வென்றால் இன்னும் மீதம் இருக்கும் 8 டெஸ்ட் போட்டிகளில் 3இல் வென்றாலே ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு (WTC Final 2025) தகுதிபெற்றுவிடலாம். மாறாக ஒருவேளை இந்த போட்டி டிராவாகும்பட்சத்தில் 8 போட்டிகளில் இந்தியா 5இல் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அடுத்து நியூசிலாந்து உடன் உள்நாட்டில் 3 டெஸ்ட் போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவுடன் அவர்களின் சொந்த மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?

எனவே, இந்த போட்டியில் வெற்றி பெற இந்தியா முடிந்தளவு முயற்சிக்கும். குறிப்பாக இன்னும் 6 செஷன்கள்தான் இருக்கின்றன. நாளை முதல் செஷனிலேயே வங்கதேசத்தை ஆல்-அவுட்டாக்கிவிட்டு, இந்திய அணி நாளை முழுவதும் அதிரடியாக ரன்களை குவிக்க வேண்டும். சற்று இமாலய ரன்களை அடித்த உடன் வங்கதேசத்தை (Team India) இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கிற்கு அழைத்து மீண்டும் குறைந்த ஸ்கோரில் ஆல்-அவுட்டாக்கினால் இந்திய அணி அந்த குறைந்த இலக்கை விரைவாக துரத்தி வெற்றியை ருசிக்கலாம். ஆனால், முன்னர் சொன்னது போல் நிச்சயம் அதிசயம் நடந்தால் மட்டுமே வாய்ப்பிருக்கிறது. இந்தியாவின் ஸ்பின்னர்கள் இந்த அதிசயத்தை நிகழ்த்திக்காட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம். 

வானிலை எப்படி இருக்கும்?

இதெல்லாம் சரி, 6 செஷனை முழுவதுமாக விளையாட முடியுமா என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. weather.com தளத்தில் உள்ள தகவலின்படி (Kanpur Test Weather Update), கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நாளை மழைக்கு 20 சதவீதம்தான் வாய்ப்புள்ளது. அதேபோல் நாளை மறுநாள் வெறும் 10 சதவீதம்தான் வாய்ப்புள்ளது. எனவே, நிச்சயம் 6 செஷன்களை ரசிகர்கள் ரசித்து பார்க்கலாம். எனவே, அடுத்த இரண்டு நாள்கள் அதிரடியான ஆட்டங்களை நீங்கள் இந்தியாவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.