ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாம் கிராமப் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறையிடமிருந்து துப்பு கிடைத்தது.
இதையடுத்து பாதுகாப்புப் படையினர், போலீஸார், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் இணைந்து அந்த இடத்தை சுற்றிவளைத்தனர். அப்போது பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் 4 பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது.
பாதுகாப்புப் படையினர்நடத்திய எதிர் தாக்குதலில் வெளிநாட்டு தீவிரவாதிகள் இருவர் உயிரிழந்தனர். அவர்கள் உட்பட மேலும் சில வெளிநாட்டுத் தீவிரவாதிகள் ஏற்கெனவே கடந்த நான்கு மாதங்களில் ஜம்முவைச் சேர்ந்த தோடா, கதுவா, ரஜோரி, பூஞ்ச், ரெய்சி ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் பாதுகாப்புப்படையினர், போலீஸாரை தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
இதேபோன்று பொதுமக்கள் மீதும் அவ்வப்போது தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதலை அடுத்து அருகில் உள்ள மலைக் காடுகளுக்குள் தப்பியோடிப் பதுங்கிக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்களைத் தேடிப்பிடிக்கும் பொறுப்பு 4000 படைவீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸாரின் தீவிர கண்காணிப்பு மற்றும் பதில் தாக்குதல் மூலம் இந்த பகுதியில் கடந்த சில மாதங்களில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இப்பகுதியில் பெருமளவில் தீவிரவாத நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.