சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை (செப்.30) முதல் சேவை துறைகள் மூலம் சாலைகளை வெட்ட தடை விதித்து மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுரு பரன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகரில் மாநகராட்சி சார்பில் புதிய சாலைகள் அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே மின்துறை, சென்னை குடிநீர் வாரியம், பிஎஸ்என்எல் போன்ற தொலைத்தொடர்பு துறைகள் உள்ளிட்ட சேவை துறைகள் சாலைகளை வெட்டி, தங்கள் துறை சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றன. சில நேரங்களில் ஒப்பந்ததாரர்கள் இடையூறு காரணமாக பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, சாலையில் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், அப்படியே விடப்படுகிறது. பருவமழை காலத்தில் அதில் நீர் தேங்கி பொதுமக்கள் அதில் விழுந்துவிடும் சம்பவங்களும் நடக்கின்றன. எனவே, வடகிழக்குப் பருவ மழை தொடங்க உள்ள நிலையில், இது போன்று சாலைகளை வெட்ட மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் பேருந்துகள் பயணிக்கும் சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் பல்வேறு சேவை துறைகள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வெட்டும் பணிகள் அனைத்தையும் செப்.30 முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்க மாநகராட்சி ஆணையர் ஜெ.குமர குருபரன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக மின்துறை, சென்னை குடிநீர் வாரியம், தொலைத் தொடர்பு துறைகள் உள்ளிட்டவற்றுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. இக்காலங்களில் அவசரத் தேவைகளுக்கு மட்டும் சாலைவெட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கு, துணை ஆணையர் (பணிகள்), வட்டார துணை ஆணையர்கள் (வடக்கு, மத்தியம், தெற்கு) ஆகியோர் மூலமாக ஆணையரின் ஒப்புதலுக்கு பிறகே அனுமதி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.