புதுடெல்லி: டெல்லியில் வரலாற்று சிறப்புமிக்க ஜும்மா மசூதி உள்ளது. அதனை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கவும் அதனைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் (ஏஎஸ்ஐ) சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில், “ஜும்மா மசூதி, மத்திய அரசால் பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னம் இல்லை. எனவே அது ஏஎஸ்ஐ கட்டுப்பாட்டில் இல்லை. கடந்த 2004-ல் ஜும்மா மசூதியை நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அப்போது ஜும்மா மசூதி, மத்திய அரசால் பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னமாக அறிவிக்கப்படாது என்று ஷாகி இமாமுக்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் 2004, அக்டோபர் 20-ம் தேதி கடிதம் எழுதியுள்ளார்’’ என்று கூறியிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி பிரதிபாஎம்.சிங் தலைமையிலான அமர்வுமுன் நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கையெழுத்திட்ட கோப்பு தாக்கல் செய்யப்படாததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
நீதிபதிகள் மேலும் கூறும்போது, “நீங்கள் தாக்கல் செய்த ஆவணங்களில் பெரும்பாலும் ரிட் மனு தாக்கலுக்கு பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களே உள்ளன.
ஜும்மா மசூதியின் தற்போதைய நிலை, அதில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள், அதனை தற்போது கட்டுப்பாட்டில் வைத்திருப்போர், ஜும்மா மசூதிக்கான வருமானம் மற்றும் செலவு போன்ற விவரம் இல்லை. எனவே
விரிவான பிரமாண பத்திரமும் அசல் கோப்புகளையும் வரும் அக்டோபரில் அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்ய வேண்டும். இதுவே உங்களுக்கு கடைசி வாய்ப்பாகும்’’ என்று உத்தர விட்டனர்.