தென்காசி: வடகரை அருகே மீண்டும் யானைகள் புகுந்ததை அடுத்து வாழைகள், நெல் பயிர்கள் சேதமடைந்தன.
தென்காசி மாவட்டத்தில் வடகரை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் தொடர்ந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல், வாழை, தென்னை, மா உள்ளிட்டவற்றையும், தண்ணீர் குழாய்கள், வேலிகளையும் யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏராளமானோர் இழப்பீடு கிடைக்காத நிலையில், தொடர்ந்து பயிர் சேதத்தால் விரக்தியடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக வனத்துறையினர் தொடர்ந்து முகாமிட்டு, விவசாய நிலங்களில் புகுந்த யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் யானைகள் மீண்டும் வந்து பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வடகரை அருகே செங்குளம் பகுதியில் வரிசைக்கனி என்பவருக்கு சொந்தமான ஏராளமான வாழைகளை இன்று அதிகாலையில் யானைகள் சேதப்படுத்தியுள்ளன. இதேபோல், அருகில் உள்ள பகுதிகளில் யானைகள் மிதித்ததில் ஏராளமான நெல் பயிர்களும் சேதமடைந்துள்ளன.
இதுகுறித்து வரிசைக்கனி கூறும்போது, “2 ஆயிரம் வாழைகள் சாகுபடி செய்திருந்த நிலையில் ஏற்கெனவே ஏராளமான வாழைகளை யானைகள் அழித்துவிட்டன. மீண்டும் கடன் வாங்கி வாழை சாகுபடி செய்திருந்தேன். அதிலும் ஏராளமான வாழைகளை யானைகள் அழித்துள்ளன. யானைகளால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதால் நிவாரணம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். யானைகள் வனப்பகுதிக்குள் வராமல் தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்.” என்றார்.
விவசாயிகள் மேலும் கூறும்போது, “வனத்துறையினரின் தொடர் நடவடிக்கையால் சில யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் அனைத்து யானைகளும் வனப்பகுதிக்குள் விரட்டப்படவில்லை. 3 யானைகள் விவசாய நிலங்களில் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. விவசாயிகள் தினமும் சேதமடைந்த பயிர்களை பார்த்து கண்ணீர் சிந்திவிட்டு, விரக்தியுடன் வரும் நிலை தொடர்கிறது. யானைகள் தொல்லைக்கு தீர்வு காணாவிட்டால் கடுமையான சேதங்கள், உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றனர்.