நியூயார்க்: பாகிஸ்தானின் எல்லைதாண்டிய தீவிரவாத நடவடிக்கைகள் ஒருபோதும் வெற்றியடையாது என்றும், அதன் செயல்கள் நிச்சயமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானின் தீமைகள் தற்போது அதன் சொந்த சமூகத்தையே பாதிப்பது ‘கர்மா’ என்று அவர் சுட்டிக்காட்டினார். ஐ.நா. உரையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கர்மா, அதன் விளைவுகள் பற்றிப் பேசியது கவனம் பெற்றுள்ளது..
ஐக்கிய நாடுகள் சபையின் 79-வது அமர்வின் பொது விவாதத்தில் சனிக்கிழமை பேசிய ஜெய்சங்கர் கூறுகையில், “தற்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் இந்திய பகுதிகளை உடனடியாக விடுவிப்பது தான்.
பலநாடுகள் தங்களின் கட்டுப்பாடுகளுக்கு மீறிய சூழ்நிலைகளால் பின்தங்கியுள்ளன. ஆனால், சிலர் பேரழிவுகரமான விளைவுகளை தெரிந்தே தேர்வு செய்கின்றனர். அதற்கு நமது அண்டை நாடான பாகிஸ்தான் முதன்மையான உதாரணம்.
பாகிஸ்தான் பிறருக்குத் தர விரும்பும் தீமைகள் அதன் சொந்த சமூகத்தை விழுங்குவதை நாம் பார்க்கிறோம். இதற்காக யாரையும் குறை கூற முடியாது. அது எல்லாம் ‘கர்மா’வே.
பாகிஸ்தானின் எல்லைதாண்டிய பயங்கரவாதம் ஒருபோதும் வெற்றி பெறாது. அதற்கான தண்டனையில் இருந்து விடுபடவும் முடியாது. அந்நாட்டின் செயல்பாடுகள் அதற்கான விளைவுகளை நிச்சயம் ஏற்படுத்தும்.
எங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை, பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ள இந்திய பகுதிகளை விடுவிப்பது மட்டுமே.” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.