பிரசார மேடையில் திடீரென மயங்கிய கார்கே.. தாங்கி பிடித்த நிர்வாகிகள்

ஜம்மு,

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு, காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. 90 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அங்குக் கடைசியாக 2014ல் தான் சட்டசபைத் தேர்தல் நடந்தது. 2019ல் தேர்தல் நடக்கவில்லை.

மொத்தம் 3 கட்டங்களாகத் தேர்தல் நடக்கும் நிலையில் அக். 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. அங்கே ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, பாஜக, காங்கிரஸ் என்று பல கட்சிகள் களத்தில் உள்ளனர். அங்கு ஏற்கனவே 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. மூன்றாவது மற்றும் கடைசிக் கட்ட தேர்தல் வரும் அக். 1ம் தேதி நடைபெறுகிறது. இதனால் அங்கு பல்வேறு தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். அதன்படி இன்று காஷ்மீரில் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே பிரசாரம் மேற்கொண்டார்.

காஷ்மீரில் உள்ள கதுவா என்ற பகுதியில் அவர் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது மேடையில் அவர் பாஜகவை கடுமையாக விமர்சித்துப் பேசிக் கொண்டு இருந்தார். அந்த பிரசார கூட்டத்தில் பேசிக் கொண்டு இருக்கும் போதே கார்கே திடீரென மயக்கம் அடைந்தார்.

கார்கே பேச்சை நிறுத்திக் கொண்டு நிற்கவே சிரமப்படுவதைப் பார்த்த உடனேயே மேடையில் இருந்த மற்ற நிர்வாகிகள் ஓடிச் சென்று அவரை தாங்கிப் பிடித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும், கார்கே தனது உரையைத் தொடர்ந்தார். அப்போது அவர், எனக்கு 83 வயதாகிறது, நான் சீக்கிரம் உயிரிழக்க மாட்டேன். பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் உயிருடன் இருப்பேன் என்று தொடர்ந்து மத்திய அரசைத் தாக்கி பேசினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.