பெய்ரூட்: லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் வான்வழி தாக்குதலில், ஹிஸ்புல்லாக்களின் மற்றொரு உயர்மட்ட தளபதியான நபில் கவுக் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை (ஐடிஎஃப்) அதன் எக்ஸ் பக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டிருக்கும் பதிவில், “ஹிஸ்புல்லாக்களின் பாதுகாப்பு பிரிவின் தளபதியும், நிர்வாகக் குழுவின் உறுப்பினருமான நபில் கவுக் கொல்லப்பட்டார். ஹிஸ்புல்லாக்களின் மூத்த தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கவுக், இஸ்ரேல் அரசு மற்றும் மக்களுக்கு எதிரான தீவிரவாத தாக்குதலில் நேரடியாக ஈடுபட்டார். கடந்த 1980-ல் அவர் ஹிஸ்புல்லாவில் இணைந்தார். அவரது துறையில் நிபுணத்துவம் வாய்ந்த முக்கிய நபராகக் கருதப்பட்டார்.
ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய அனைத்து தளபதிகளையும் இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழிக்கும். இஸ்ரேல் அரசு மற்றும் மக்களை அச்சுறுத்தும் அனைவருக்கும் எதிராக ஐடிஎஃப் செயல்படும்” என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஹிஸ்புல்லாக்கள் இதுவரை எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.
ஹசன் நஸ்ரல்லா உடல் மீட்பு: இதனிடையே இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லாக்களின் தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லாவின் உடல் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்லதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பெய்ரூட் மீது நடந்த தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை சனிக்கிழமை அறிக்கை மூலம் உறுதி செய்த ஹிஸ்புல்லா அமைப்பு, அவர் எவ்வாறு கொல்லப்பட்டார், அவரது இறுதிச் சடங்கு எப்போது நடைபெறும் என்பது பற்றி எதுவும் கூறவில்லை. என்றாலும் தகவல் அறிந்த இருவர் கூறுகையில், ‘நஸ்ரல்லாவின் உடலில் எந்த நேரடிக்காயங்களும் இல்லை. குண்டு வெடித்த அதிர்ச்சியின் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்’ என்று தெரிவித்துள்ளனர்.
லெபனான் மிகப்பெரிய இடம்பெயர்வைச் சந்திக்கிறது: “லெபனான் தனது வரலாற்றில் மிகப்பெரிய இடம்பெயர்வுக்கான நெருக்கடியை சந்தித்து வருகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் தீவிரமான தொடர் தாக்குதல் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் லெபானின் சில பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்” என அந்நாட்டு பிரதமர் நஜிப் மிகாதி தெரிவித்துள்ளார்.