மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் மாதம் மத்தியில் சட்டமன்றத்தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்காக மாநில அரசு பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வருகிறது. அதோடு முடிக்கப்பட்ட திட்டங்களையும் அவசர அவசரமாக தொடங்கி வைத்து வருகிறது.
மும்பையில் ஆரேகாலனியில் இருந்து பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் வரையில் பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டம் திட்டம் ஓரிரு நாளில் தொடங்கப்பட இருக்கிறது. புனேயில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் திடீரென புனே மற்றும் மும்பையில் கடந்த வாரம் கனமழை பெய்ததால் பிரதமர் மோடி தனது புனே பயணத்தை ரத்து செய்தார். ஆனால் முடிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை உடனே திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து இன்று காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி புனே மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து ஸ்வர்கேட் வரை ரூ.1810 கோடியில் கட்டப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதோடு ஸ்வர்கேட்டில் இருந்து கத்ரஜ் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க கட்டுமானப்பணிகளையும் தொடங்கி வைத்தார். இத்திட்டம் ரூ.2955 கோடியில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
அதோடு சத்ரபதி சாம்பாஜி நகர் அருகில் 7855 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ள தொழில் பேட்டையையும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். இத்திட்டம் ரூ.6400 கோடியில் மூன்று கட்டமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. சோலாப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஒரேநாளில் மகாராஷ்டிரா முழுவதும் மொத்தம் ரூ11200 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.