இம்பால்: மணிப்பூரில் இம்பால் பள்ளத்தாக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் மைத்தேயி சமூகத்தினருக் கும் அதையொட்டிய மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இது இனக் கலவரமாக மாறியதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அங்கு வன்முறை தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில் மணிப்பூரின் 3 மாவட்டங்களில் இருந்து பெருமளவு ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். காங்போக்பி மாவட்டம் லோச்சிங் ரிட்ஜ் பகுதியில் மாநில போலீஸார், அசாம் ரைபில்ஸ் படையினர் இணைந்து சோதனை நடத்தினர். இதில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும் டெட்டனேட்டர்கள், கையெறி குண்டுகள், நாட்டு வெடிகுண்டுகள் உள்ளிட்ட வெடி பொருட்களையும் கைப்பற்றினர்.
இதுபோல சுராசந்தப்பூர் மாவட்டம் கோதோல் என்ற கிராமத்தில் மாநில காவல்துறை, பிஎஸ்எப், சிஆர்பிஎப் ஆகியவை இணைந்து நடத்திய சோதனையில் இரு ராக்கெட்டுகள் மற்றும் ராக்கெட் குண்டுகளை கைப்பற்றினர்.
தவுபால் மாவட்டம் பைனோம் மலைப் பகுதியில் மாநில போலீஸார், அசாம் ரைபில்ஸ் படை இணைந்து 4 கையெறிகுண்டுகள், 3 டெட்டனேட்டர்கள், கண்ணீர் புகைக்குண்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.