பெங்களூரு: மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை பெற்றதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்ய பெங்களூரு போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூருவில் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், ஜன அதிகார சங்கர்ஷ சங்கத்தின் துணைத் தலைவர் ஆதர்ஷ் அய்யர் கடந்த மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ”மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை வைத்து, தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நன்கொடை பெற்றுள்ளனர். தேர்தல் பத்திர நடைமுறையை கொண்டு வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரி இருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ”இந்த புகார் தொடர்பாக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூருவில் உள்ள திலக் நகர் போலீஸார் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்” எனக்கூறி, இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
குமாரசாமி, எடியூரப்பாவிடம் விசாரணை: கடந்த 2006-ம் ஆண்டு கர்நாடகாவில் மஜத – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்றது அப்போது பெங்களூரு நகர வளர்ச்சி ஆணையம் தனியார் நிறுவனத்திடம் இருந்து 1.11 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. இதனை அப்போது முதல்வராக இருந்த குமாரசாமியும், துணை முதல்வராக இருந்த எடியூரப்பாவும் விடுவித்து உத்தரவிட்டனர்.
இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த இவ்வழக்கை லோக் ஆயுக்தா போலீஸார் மீண்டும் விசாரிக்க முடிவெடுத்தனர். இதையடுத்து மத்திய அமைச்சர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோரிடம் நேற்று விசாரணை நடத்தினர்.