புதுடெல்லி: ஹரியானா பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவில், நீங்கள் அதானி, அம்பானி, அமிதாப் பச்சனை பார்த்திருப்பீர்கள். ஆனால், நீங்கள் அங்கு விவசாயிகள், உழைக்கும் வர்க்கத்தினர் யாரையும் பாத்திருக்க மாட்டீர்கள். நமது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பழங்குடி இனத்தவர் என்பதால் அவரைக் கூட அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை” என்றார்.
இதுகுறித்து பாஜக தலைவர் சி.ஆர்.கேசவன் கூறுகையில், “ராகுல் காந்தி கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் இந்து தர்மத்தையும், இந்து மதத்தைப் பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையையும் அவமதிக்கிறார். அவரது இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது” என்றார்.
பாஜக தலைவர் ஷெசாத் பூனாவாலா கூறுகையில், “ராகுல் ஒரு பொய்யர். கோயில் திறப்பு விழாவில் ஏழைகளோ உழைக்கும் மக்களோ இல்லை என்று அவர் கூறுகிறார். கோயில் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட உழைப்பாளர்களை பிரதமர் மோடி மலர் தூவி வரவேற்றதை ராகுல் பார்க்கவில்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக தலைவர் திராத் சிங் ராவத், “இந்திய கலாச்சாரம் குறித்த புரிதல் ராகுலுக்கு இல்லை. அதனால்தான், அவரால் இந்திய சடங்குகள், சம்பிரதாயங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை” என்றார்.