திஸ்பூர்: வங்கதேசத்தில் இருந்து அசாம் மாநிலத்துக்குள் ஊடுருவிய 17 பேர், நேற்று அதிகாலை வங்க தேச எல்லைக்குள் திருப்பி அனுப்பப்பட்டதாக மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா தெரிவித்துள்ளார்.
வங்கதேச பொதுத் தேர்தலுக்குபின் அங்கு கலவரம் ஏற்பட்டது. அங்கிருக்கும் மக்கள், இந்தியாவுக்குள் ஊடுருவது அதிகரித்துள்ளது. இந்திய – வங்கதேச எல்லையில், எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களையும் மீறி ஊடுருவல் நடைபெறுகிறது.
வங்கதேசத்தில் இருந்து கடந்த5-ம் தேதி ஐந்து பேர் அசாம் மாநிலத்தின் கரீம்கஞ்ச் மாவட்டத்துக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்றனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர் 17 பேர் நேற்று அதிகாலை வங்கதேச எல்லைக்குள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்திலிருந்து ஊடுருவும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 8 குழந்தைகள் உட்பட வங்கதேசத்தினர் 17 பேர் , நேற்று அதிகாலை 4 மணியளவில் வங்கதேச எல்லைக்குள் அசாம் போலீஸாரால் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தியா – வங்கதேச எல்லையில் அசாம் போலீஸாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட் டுள்ளனர். இவ்வாறு அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா தெரிவித்துள்ளார்.